சிறிலங்கா இனவெறிக் காடையர்களினால் 1983 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட யூலை 23 தமிழினப் படுகொலையின் 40 ஆம் ஆண்டு நிறைவையொட்டிய பேரணியும் கவனயீர்ப்பு நிகழ்வும் பிரான்சின் பாரிஸ் றிபப்ளிக் பகுதியில் ஆரம்பமாகி ஸ்ரேலிங்கார்ட் பகுதிவரை சென்று நிறைவடைந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.30 மணியளவில்
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழீழ மக்கள் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செயற்பாட்டாளர்களோடு பொதுமக்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு தமிழீழத் தேசியக்கொடிகள் பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
குறித்த பேரணியானது றிபப்ளிக்கில் இருந்து ஆரம்பமாகி குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் தமிழர்கள் அதிகம் வாழும் லாச்சப்பல் பகுதியில் சிறிது நேரம் தரித்து நின்று மாலை 17.00 மணியளவில் ஸ்ரேலிங்கார்ட் பகுதியை சென்றடைந்து அங்கு கறுப்புஜூலையில் உயிரிழந்த மக்கள் நினைவாக வைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி முன்பாகச் சுடர் ஏற்றப்பட்டது. நினைவுச்சுடரினை தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழியில் நினைவுரைகளும் இடம்பெற்றன.
நிறைவாகத் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவடைந்தது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)
(படங்கள்: யூட், ரதன்)