பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 28 ஆவது வருடமாக நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த விளையாட்டுப் போட்டி 2023 இன் இறுதிப்போட்டிகள் பிரான்சு சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் கடந்த (16.07.2023) ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்போடு நடைபெற்று முடிந்தது.
கடந்த 08.07.2023 சனிக்கிழமை கிறித்தே பகுதியில் ஆரம்பமான குறித்த போட்டிகள் 15.07.2023 சனிக்கிழமை சார்சல் பகுதியில் அமைந்துள்ள நெல்சன் மண்டேலா விளையாட்டுத் திடலில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்ற நிலையில் கடந்த 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
அன்றையதினம் சார்சல் நெல்சன் மண்டேலா மைதானப் பகுதியில் அமைந்துள்ள லெப்.சங்கர் நினைவுத்தூபி முன்பாக காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற ஆரம்ப வணக்க நிகழ்வில் ஈகைச்சுடரினை 19.11.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் வீரச்சாவடைந்த மேஜர் அற்புதம் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து பான்ட் தாளவாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, பொதுச்சுடரினை சார்சல் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.டக்ளஸ் அவர்கள் ஏற்றிவைக்க பிரெஞ்சுக்கொடியை சார்சல் தமிழ்ச் சங்கப்பரப்புரைப் பொறுப்பாளர் திரு.செல்லையா கணபதிப்பிள்ளை அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு.கிருபா அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
ஈகைச்சுடரினை மேஜர் நற்குணம் (வீரச்சாவு நாகர்கோவில் 19.11,2000) ஏற்றிவைக்க மலர்வணக்கத்தை 1991 ஆனையிறவுச்சமரில் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட் நிரோவின் சகோதரன் ஏற்றிவைத்தார்.
ஒலிப்பிக் தீபத்தை மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்கள் மெய்வல்லுநர் போட்டித் தலைவன் மற்றும் தலைவி ஆகியோரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து வீரர்கள், நடுவர்கள் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றதையடுத்து போட்டிகள் ஆரம்பமாகின.
தமிழர் வி.க. 93, தமிழர் வி.க. 94, தமிழர் வி.க.95, யாழ்டன் வி.க., நல்லூர்ஸ்தான் வி.க., அரியாலை ஐக்கிய கழகம் , வட்டுக்கோட்டை வி.க. எவ்.சி. நெவ்.துறுவா ஆகிய கழகங்களிடையே விறுவிறுப்பாக போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
28 வருடங்களாக பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையினரால் நடாத்தப்பட்டுவரும் இந்த விளையாட்டுப் போட்டிகள் திறம்பட நடைபெறுவதற்கு அயராது உழைத்துவரும் தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்கள், நீதிதவறாத நடுவர்கள் உணர்வுபூர்வமான அறிவிப்பாளர்களின் அறிவிப்புடன் உற்சாகமான கரகோசத்துடன் அழைத்துவரப்பட்டனர்.
தொடர்ந்து கழக வீரர்களின் அணிவகுப்பு சிறப்பாக அமைந்திருந்தது. அணிவகுப்பு மரியாதையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர், தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினரும் உதவிப்போட்டி முகாமையாளர் திரு.பீலிக்ஸ், பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்ட மாவீரர் மேஜர் நற்குணம் அவர்களின் சகோதரி, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் பொறுப்பாளர் திருமதி முகுந்தினி ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
மாவீரர் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்ட மற்றும் உதைபந்தாட்டப் போட்டிகளின் இறுதிப்போட்டிகளும் கரப்பந்தாட்டப்போட்டிகளின் செற்றப் போட்டிகளும் இடம்பெற்றிருந்தன.
சார்சல் மாநகர் முதல்வர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றிபெற்ற கழகங்களுக்கும் வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணமும் பதக்கமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
தடகளவிளையாட்டு, மற்றும் அனைத்து விளையாட்டுக்கள் என்ற அடிப்படையில் இரண்டு சுற்றுக் கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அனைத்து விளையாட்டுக்களின் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இடத்தை யாழ்ட்டன் விளையாட்டுக்கழகமும் இரண்டாமிடத்தை நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகமும் மூன்றாம் இடத்தை தமிழர் விளையாட்டுக்கழகம் 94 உம் பெற்றுக்கொண்டன.
தடகள விளையாட்டுக்களின் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இடத்தை யாழ்ட்டன் விளையாட்டுக்கழகமும் இரண்டாமிடத்தை நல்லூர்ஸ்தான்; விளையாட்டுக்கழகமும் மூன்றாம் இடத்தை வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகமும் பெற்றுக்கொண்டன.
தொடர்ந்து மூன்று வருடங்கள் முதலிடத்தைப் பெற்று யாழ்ட்டன் விளையாட்டுக்கழகம் சுற்றுக்கிண்ணத்தைத் தனதாக்கிக்கொண்டது.
கொடிகள் இறக்கப்பட்டதைத் தொடர்ந்து நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வுகள் நிறைவுகண்டன.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)