தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நேரடியான இருபக்க ஒப்பந்தம் ஒன்றினூடு ஐரோப்பாவில் தமிழ்மொழிக்கான ஒரு கருத்தியல் பாய்ச்சலுக்கு வித்திட்டுள்ளன. பட்டமேற்படிப்பு மற்றும் தமிழியலின் பல்வேறு பாடநெறிகளை வழங்க தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் இவ்வொப்பந்தத்தினூடாக முன்வந்துள்ளது. இந்த இருபக்க ஒப்பந்தமானது தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தமிழ்மொழி சார்ந்த ஆழமான வினைத்திறன் மிக்க செயற்பாட்டிற்குக் கிடைத்த பேரொப்புதலாகக் கொள்ளலாம். தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் வெள்ளிவிழா ஆண்டில் இப்பெருநிகழ்வு நிகழ்ந்திருக்கின்றது.
தமிழியல் பட்ட மேற்படிப்பான முதுகலை (M. A. – Tamil), தமிழ் கற்பித்தலில் பட்டயம் (Diploma in Tamil Teaching), சங்க இலக்கியம், திருக்குறள் ஆய்வுகள், தமிழ் இலக்கண ஆய்வுகள், பேசும் கலை, எழுதும் கலை உட்பட்ட தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பல கற்கைநெறிகளை இனிவரும் காலங்களில் பிரான்சிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினூடாக மேற்கொள்ள முடியும். முதற்கட்டமாக தமிழியல் முதுகலைமாணி (M.A.) மற்றும் தமிழ் கற்பித்தலில் பட்டயம் ஆகிய பாடநெறிகளை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் 2023-2024 கல்வியாண்டிலிருந்து தொடங்கவுள்ளது.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழியல் இளங்கலைமாணி (B.A.) பட்டப்படிப்பு மேற்கொள்ளப்பட்டு 60 இற்கு மேற்பட்ட இளங்கலைமாணிப் பட்டகர்கள் வெளியேறியுள்ள நிலையில் அப்பட்டகர்களுக்கு மட்டுமல்லாது , இலங்கை, இந்தியாவில் இளங்கலையை நிறைவு செய்தவர்களுக்கும் இதனூடாக மேற்படிப்பிற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழியல் இளங்கலைமாணிப் பட்டச்சான்றிதழ் ஐரோப்பிய பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தொழில்சார் சான்றிதழ் நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் பட்டமேற்படிப்புக்கான ஒப்புதல் கிடைத்திருப்பதானது எதிர்காலத்தில் ஐரோப்பாவில் தமிழ்மொழிக்கான திடமான பரந்துபட்ட தொழில்துறைக்கான வாய்ப்பாக அமையும்.
தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழைப் பயின்ற இளந்தலைமுறையினர், இரண்டாந்தலைமுறை ஆசிரியர்களாகக் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழியல் இளங்கலைமாணிப் பட்டப்படிப்பை மேற்கொண்டும் வருகின்றனர். அவர்களின் தொடர்வேண்டுகோளின் அடிப்படையிலேயே இப்பட்ட மேற்படிப்பைத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பெற்றுள்ளது. தமிழ்ச்சோலை ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தி தமிழ் கற்பித்தலில் உச்சம் நோக்கி நகர இப்பட்ட மேற்படிப்புகள் பெரிதும் உதவும் என தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நம்புகின்றது.
‘தமிழ் கற்பித்தலில் பட்டயம்’ எனும் கற்கைநெறியினால் தமிழ்ச்சோலைகளில் தமிழ் கற்பிக்கும் 600 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களின் கற்கை மேம்பாட்டை உறுதிசெய்து, சிறந்த கற்பித்தல் தகுதிநிலையைப் பெற்றுக் கொள்வதற்காகவும் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்துள்ளது.
ஐரோப்பாவில் தமிழை ஒரு தொழில்சார் பொருளீட்டு மொழியாக உயர்த்தவும் அதன் தொன்மையையும் செழுமையையும் அனைத்து இனத்தவருக்கும் உணர வைக்க மட்டுமல்லாது, எமது இனவிடுதலைக் கனவை நீறுபூர்த்த நெருப்பாகக் காக்கும் தொடர்முயற்சியின் நீட்சியாகவே தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் இப்பாய்ச்சலைக் கருதுகிறது.
இனியும் வாழும் தமிழ்…! இன்னும் வளரும் தமிழ்…!