மேற்கு உக்ரைனிய நகரான லெவிவில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் மீது ரஷ்ய ரொக்கெட் குண்டு விழுந்து குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் உள்துறை அமைச்சர் இஹோர் கிலிமென்கோ தெரிவித்துள்ளார்.
இதில் மேலும் 32 பேர் காயமடைந்திருப்பதோடு நகரின் சிவில் உட்கட்டமைப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவென்று அந்த நகர மேயர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த தாக்குதல் பற்றி ரஷ்ய தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
இந்த தொடர்மாடியின் இடிபாடுகளில் இருந்து ஏழு பேர் மீட்கப்பட்டதாகவும் மேலும் பலர் சிக்கி இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கிலிமென்கோ டெலிகிராமில் குறிப்பிட்டுள்ளார்.
இதில் 60 வீடுகள் சேதம் அடைந்திருப்பதோடு பல கட்டடங்களின் கூரைகள் உடைந்துள்ளன.
கருங்கடலில் இருந்து ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் விமானப்படை குறிப்பிட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி வருவதோடு பெரும்பாலான தாக்குதல்களில் பொதுமக்கள் நிலைகளே இலக்கு வைக்கப்பட்டுள்ளன.