யா / நெல்லியடி.மத்திய மகா வித்தியாலய முகாம் முதற் கரும்புலி கப்டன் மில்லர் தாக்கி அழித்த நாள் இன்றாகும்.
தரம்-5 முடித்து தரம் 6 இல் யா/ ஹாட்லிக் கல்லூரியில் சேர்ந்த போது எனது ஊரிலிருந்து பாடசாலைக்கு பேருந்தில் பயணிக்க வேண்டி இருந்தது. நண்பர்களுடன் போட்டி போட்டு ஆசனத்தைக் கைப்பற்றுவதும் அதிலும் சன்னலோர ஆசனங்களைக் கைப்பற்றுவதில் அலாதிப் பிரியம் எனக்கு. சன்னலருகே அமர்ந்தபடி இயற்கை எழிலை இரசிப்பது எண்ணத்தில் உதிப்பதெல்லாம் கவிதை என எண்ணியதும் நீங்கா நினைவுகள். இவ்வாறே இரசித்த படி செல்லுகையில் ஒரு சிலையொன்று அடிக்கடி தென்படும் அதில் என்னை அறியாமல் ஒரு ஈர்ப்பு பற்றிக் கொண்டது. அது பாடசாலை ஒன்றின் (யா/நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்- அன்றைய பெயர்)முன்றலில் அமைந்திருந்தது. ஒரு நாள் சரியாக அதற்கு நேரே பேரூந்து நிறுத்தப்பட்டது அந்த சிலையை உற்று நோக்கினேன் ஒரு கையை இடுப்பில் வைத்தபடி மற்றைய கையை உயர்த்தி இரு விரல்களை நீட்டியபடி கம்பீரமாக நின்றது. எதையோ பெரிதாக சாதித்து விட்ட பெருமிதத்தில் அது நிமிர்ந்து நிற்பதை என்னால் உணர முடிந்தது. ஆம் அந்தச் சிலை உயிருடன் நடமாடிய காலத்தில் செய்த சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல…
இதையெல்லாம்_நானறிந்தது இன்று போல் அன்றொரு நாளில்.( யூலை-5) ஆம் அன்றைய நாள் பாதுகாப்பு வலயத்திற்குள் அகப்பட்டிருந்த எனது பாடசாலையில் வேலிகளில் எட்டிப் பார்க்கும் ஆமிக்காரர்களின் தலைகளுக்கு நடுவே வாகை மர நிழலில் மாணவர்கள் மற்று ஆசிரியர்கள் பலரிருக்க ஒலிவாங்கிகளின் முன் நின்றவர்களெல்லாம் வசந்தன் என்ற பழைய மாணவர் ஒருவரின் அருமை பெருமைகளையெல்லாம் பெருமிதத்தோடு உரைத்துக் கொண்டிருந்தனர். எமது பாடசாலையில் அன்றைய கட்டத்திலும் விளையாட்டில் தகர்க்கப்படாத பல சாதனைகளுக்கு உரித்துடையவனாம் அந்த மாணவன். அதனால் எம் விளையாட்டு மைதானமும் அவ் வீரனின் பெயர் பெற்றதாம். அந்த வீரன் தான் பிற்காலத்தில் எம்மின விடுதலையில் வேட்கை கொண்டு தன்னுயிரைய அர்ப்பணித்து விடுதலை போராட்ட வரலாற்றில் புது அத்தியாயத்தை உருவாக்கியவன் என்பதை அறிய முடிந்தது. ஆம் விடுதலை நடவடிக்கை” (Operation Liberation) என்ற பெயரில் சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தின் ஒருபகுதியான வடமராட்சியைக் கைப்பற்ற 1987 இன் நடுப்பகுதியில் நடவடிக்கையொன்றை மேற்கொண்டு சில இடங்களையும் கைப்பற்றியிருந்தது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரை அழிக்கும் நோக்கில் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு சென்று தாக்குதல் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தன்னைத் தயார் செய்து சாதித்தவன் தான் கப்டன் மில்லர் என பெயர் பெற்ற அதே வசந்தன். இந்த வீரனின் இறுதிச் சாதனை நாள் (யூலை-5) தான் உலக நாடுகளே கண்டு அஞ்சிய கரும்புலிகள் எனும் படையணி தோன்ற பிள்ளையார் சுழி போட்ட நாள். இப்போது தான் புரிகின்றது அந்த சிலைக்குள் எப்படி இத்தகைய கம்பீரம் குடி கொண்டதென்று.
யூலை-5