நியூலிசூர்மாறன் தமிழ்ச்சோலை நடாத்திய திருக்குறள் திறன் போட்டி!

0
295

நியூலிசூர்மாறன் தமிழ்ச்சோலை நடாத்திய திருக்குறள் திறன் போட்டி தமிழ்ச்சோலை மண்டபத்தில் கடந்த 01.07.2023 சனிக்கிழமை பி. பகல் 1:30 மணியில் இருந்து நடைபெற்றிருந்தது. தமிழ்ச்சோலை தலைமைப்பணியக ஏற்பாட்டில் வந்திருந்த நடுவர்கள் பணியாற்ற பாலர் பிரிவிலிருந்து, அதிமேற்பிரிவு வரையில் மாணவர்கள் பங்கு பற்றியிருந்தனர். தமது மழலை மொழியில் ஒவ்வொருவரும் தாம் மனப்பாடம் செய்தவற்றை நடுவர்களுக்கு ஒப்புவித்தனர். பங்கு பற்றிய அனைவரும் திருக்குறளை அழகாக உச்சரித்திருந்தனர். தமிழ் பண்பாட்டு உடைகளையும் அணிந்து பொட்டுக்கள், பூக்களோடும் அழகான புன்சிரிப்புகளுடன் குழந்தைகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிறப்பாகக் கலந்து கொண்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்களும், தமிழ் விடுதலை உணர்வாளர், தமிழர் விளையாட்டுக்கழகம் 93 ன் தலைவர் அப்பிரதேச வசிப்பாளருமான திரு. யோகச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையும் ஆற்றினார்கள். இங்குள்ள சங்கத்தை இன்னும் பலமிக்கதாக்க வேண்டும் என்றும் தமிழ்ச்சோலை நிர்வாகியின் அர்ப்பணிப்பும் செயற்பாடும் தான் தொடர்ந்து ஏற்பட்ட பல தடங்கலுக்கு மத்தியிலும் இன்று தமிழ்ச்சோலை பயணிப்பதையும் எடுத்துக் கூறினர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த பிரதேசத்திலும் ஏற்பட்ட வன்முறைகள், பல வாகனங்கள் எரிக்கப்பட்டு, இந்த போட்டி நடக்குமா நடக்காதா என்ற நிலையில் இதில் பங்குகொண்ட போட்டியாளர்களும், அவர்களின் பெற்றோர்களும் பாராட்டப்பட்டனர். நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பங்குபற்றிய மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சான்றிதழ்களை போட்டியில் பங்குபற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் வழங்கிய சிறப்பாகவும் முன்மாதிரியாகவும் இருந்தது. வெற்றிக்கிண்ணங்களும் சங்க உறுப்பினர்களாலும், கலந்து கொள்ள அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களாலும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. தமிழ்ச்சோலையின் ஆசிரியர்கள், சங்கத்தின் செயற்பாட்டாளர்கள், பழைய மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்று பெற்றோர்களின் ஆதங்கமாக இருந்திருந்தது. நிகழ்வில் பெற்றோரின் சார்பில் உரையாற்றிய சகோதரி அவர்கள் தமிழ் தமது பிள்ளைக்கு எவ்வளவு அவசியம் என்பதையும், வீட்டில் வைத்து தமிழ் சொல்லிக்கொடுப்பதைவிட பிள்ளைகளோடு பிள்ளைகளாக ஒன்றாக சேர்ந்து படிக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமானது என்றும் தமிழ்ச்சோலையை நாம் வளர்க்க வேண்டும். தன்னைப்போலவே தான் ஏனைய பெற்றோர்களும் இதில் அதிக கவனம் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழ்ச்சோலை நிர்வாகி கூறும்போது தமிழோடு, இதுவரை நடைபெற்று வந்த நடனம், மற்றும் விளையாட்டு என்பன தொடர்ந்து நடைபெறும். பிள்ளைகளைப் பங்கு கொள்ள வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். போட்டியில் பங்கு பற்றிய குழந்தைகளின் திறன்கள் பற்றி நடுவர்களில் ஒருவர் உரையாற்றியிருந்தார். நிகழ்வுகள் 6.30 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here