அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரும்போது இராணு வத்தினர் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூ பிக்கப்பட்டால் அவர்களையும் விடுதலைசெய்ய வேண்டுமெனக் கூறுவது நகைப் புக்குரியதென வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குதல் தொடர்பான யோசனை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது என்பது அரசியல் ரீதியான தீர்மானமாகும். அரசியல் ரீதியான தீர்மானங்களுக்கு பல காரணங்களை மனதில் வைத்து செயல்வடிவம் கொடுக்கின்றனர்.
ஜே.வி.பி. காலத்தில் கொடூரமான செயலை செய்தவர்களுக்கு கூட பொது மன்னிப்பு வழங்கினார்கள். ஆனால் தமிழ் கைதிகளுக்கு ஏன் அவ்வாறான மன்னிப்பை வழங்கவில்லை என்று எல்லோரும் கேள்வி கேட்கின்றனர்.
இந்நிலையில் பொது மன்னிப்பு வழங்கப்படுமானால் எதிர்காலத்தில் குற்றம்சாட்டப்படப்போகும் இராணுவத்தினரையும் நாங்கள் விடுக்கவேண்டுமென கூறுகிறார்கள். இந்த விடயம் உண்மையில் நகைபபுக்குரிய விடயம்.
ஏனெனில் இராணுவத்தினர் மீது இன்னமும் குற்றம் சாட்டப்படவில்லை. அவ்வாறிருக்கையில் இக்கருத்துக்களை முன்வைப்பதானது இராணுவத்தினர் குற்றம்சாட்டப்பட வேண்டியவர்கள். அவர்கள் குற்றவாளிகள் என்று இவர்கள் தீர்மானித்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.
மேலும் இக்கருத்துக்கள் இராணு வத்தினரை தற்போதே குற்றம்சாட்டி சிறையில் அடைத்துவிட்டு இன்னும் 7,8 ஆண்டுகளின் பின்னர் அவர்களை விடுவிக்க வேண்டி இருக்கும் என்ற நிலைமையையே உருவாக்குகிறது.
ஆகவே தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பில் விடமுடியாது என்று கூறுவது தவறானது. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் அவர்கள் இன்னமும் குற்றவாளிகளாக காணப்படவில்லை. இவர்கள் குற்றம் செய்யவில்லை என்று அரசாங்கமும் கூறிக்கொண்டிருக்கிறது.
ஆனால் குற்றம்சாட்டப்படாத நிலையில் இவ்வளவு காலமும் தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் வாடுகிறார்கள். அவர்கள் பல்வேறு பிரச்சினையை எதிர்நோக்கி வரும் நிலையில் அவர்களை பொது மன்னிப்பில் விடுதலை செய்யாது எதிர்காலத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படலாம் என்ற சந்தேகத்திலுள்ள இராணுவத்தினருடன் தொடர்புபடுத்திப் பேசுவது நகைப் புக்குரியது என்றார்.