முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் யூலை 6 திகதி அகழ்வு பணிக்கு நீதிபதி உத்தரவு !அதுவரை எச்சங்கள் அழிவடையாமல் பாதுகாக்க காவல்துறையினருக்குப் பணிப்பு!!
நேற்றுமுன்தினம் (29) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கொக்குளாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர் .
இது தொடர்பாக நேற்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை 2.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது குறித்த மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் யூலை 6 ஆம் திகதி அகழ்வு பணிக்கு நீதிபதி உத்தரவிட்டதோடு அதற்குரிய நபர்களுக்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அதுவரை எச்சங்கள் அழிவடையாமால் பாதுகாக்குமாறும் கொக்கிளாய் காவல்துறையினருக்கு பணிப்பு விடுத்தார்.
இது பெண் போராளிகளின் தடயங்களாக காணப்படுகின்றது. பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன இதன்போது இனம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய ஐயம் எழுந்துள்ள நிலையில் குறித்த பகுதிக்கு நீதிபதி வருகை தந்தபோது குறித்த பகுதியில் மனித உரிமைகள் சட்டத்தரணி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ,சமூக செயப்பாட்டாளர் பீற்றர் இழஞ்செழியன்,கிராம மட்ட அமைப்புக்களின் தலைவர்கள் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் பிரசன்னமாகியிருந்தனர்