திராப் பிராங்கோ தமிழ்ச்சங்க தமிழ்ச்சோலையின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழா!

0
294

பாரிசின் புறநகர் பகுதியில் 78 ஆவது மாவட்டத்தின் திறாப் என்னும் மாநகரத்தில் வாழும் தமிழ் மக்களின் திராப் பிராங்கோ தமிழ்ச்சங்க தமிழ்ச்சோலையின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 11.06.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு Salle Jean Baptiste Clement மண்டபத்தில் நடைபெற்றது.

திறாப் தமிழ்ச்சோலை மாணவ மாணவியரின் இன்னியம் அணிவகுப்புடன் திறாப் மாநகர முதல்வர் Ali Rabeh அவர்கள் மற்றும் திறாப் பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. மகிந்தன், தமிழ்ச்சோலை நிர்வாகி திரு. சேத்திரபாலன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா, தமிழ்ச்சோலை தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. நாகயோதீசுவரன், மற்றும் தமிழர் புனர்வாழ்வுக்கழக தலைவர் திரு. கோணேசுவரன், நாடுகடந்த அரசு உறுப்பினர் திரு.கலையழகன் மற்றும் கலைஞர்கள், தாயகப் பற்றாளர் எதிர்கால மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்கள், தமிழ்ச்சங்க உறுப்பினர் அணியாக மக்களின் கரகோசத்துடன் மண்டபம் அழைத்து வரப்பட்டு முக்கியஸ்தர்கள் மங்கல விளக்குகளை ஏற்றிவைத்தனர்.

அகவணக்கம் தமிழிலும், பிரெஞ்சு மொழியிலும் இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழ்ச்சோலைகீதம் இசைக்கப்பட்டது.
வரவேற்பு நடனத்துடன் வரவேற்புரை இடம் பெற்றது. வரவேற்புரையை தமிழ்ச் சோலை நிர்வாகி ஆற்றிவைக்கத் தலைமையுரையினை தமிழ்ச்சங்கத் தலைவர் பிரெஞ்சு மொழியில் ஆற்றியிருந்தார்.
தேவாரம், கவிதை, மிருதங்க தனி ஆவர்த்தனம், தமிழர் பண்பாடு பற்றிய பேச்சு, யோகக்கலை, இசை நடனம், வீணை இசை, வயலின் இசை, குழுஇசைப் பாடல், மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் ( போதை பொருட்களை இல்லாதொழிப்போம், பெற்றோர்களின் அரவணைப்பு, புலம் பெயர் மக்களின் இன்னலில் தாயக மக்களது சொகுசு வாழ்க்கை, சமூகவலைத்தளப் பார்வைகள், தாயக மக்களது அவலமும் அந்நிய நாட்டு மக்களின் அவலமும் என்ற காத்திரமான அவசியமான தலைப்புகளிலும் சமூக வலைத்தளப் பார்வையில் என்ற தலைப்பில் மாணவர்கள் மக்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்திருந்தனர்.
கலை நடன ஆசிரியரால் திறாப் தமிழ்ச்சோலை மாணவர்களை கொண்ட பறை இசை வழங்கப்பட்டது. இப்பறை இசையானது அனைவரையும் விழிநிமிர்த்திப் பார்க்க வைத்தது.
அதுபற்றி சில கருத்துக்களை கலைபண்பாட்டுக்கழகத்தின் மூத்த கலைஞர் திரு. பரா அவர்கள் கூறியிருந்தார்.
20 ஆண்டு நினைவாக நிகழ்வில் திராப் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தால் ஆண்டு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. ஆண்டு மலரின் முதல் பிரதியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் வெளியிட்டு வைத்திருந்தார்.

மலரினை ஏனைய சங்க உறுப்பினர்களும் பெற்றுக் கொண்டு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த ஏனைய சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கட்டமைப்புகளைச் சார்ந்தவர்கள், வர்த்தகர்கள், பெற்றோர்கள் பெற்றுக் கொண்டதோடு தமது பொருளாதாரம ணபங்களிப்புகளையும் செய்திருந்தனர்.
சிறப்புரையை பரப்புரைப் பொறுப்பாளர் ஆற்றியிருந்தார் தமிழ்சங்கம் 20 ஆண்டு கால பயணத்தில் அனைத்துத் துறைகளிலும், தமிழ்சங்கத்தாலும், தமிழ்ச்சோலைக் குழந்தைகளாலும், பிள்ளைகளாலும், செய்யப்பட்ட பல திறமைகளைகளையும், அவர்கள் தமது மொழியிலும், கலைபண்பாட்டிலும் பற்றுக்கொண்டு பயின்றுவருவதும், வாழ்வதும் அதற்கு உறுதணையாக பிரான்சு தமிழ்ச்சங்கம், தமிழ்ச்சோலைகள் இதற்கு உறுதுணையாக இருந்து வரும் அனைத்து தமிழர் கட்டமைப்புக்களையும் பாராட்டியதோடு காலத்தின் தேவையையும் கருத்தில் கொண்டு பயணிக்க வேண்டும் அதில் எமது அரசியல் நிலைப்பாடு என்பது மிகமிக முக்கியமானது என்பதையும் அதனை வைத்துக்கொண்டுதான் இத்தனைகாலமும் எம் அனைவராலும் வீழ்ந்து விடாத வீரமாகவும், புகழுக்குரியவர்களாகவும் நாம் இருந்து வருவதையும், பெற்றோர்களுக்கும், எம் மூத்தவர்களுக்கும் சொல்லும் செய்தி ஒரு இனமானது தனது இனத்தினது புகழையும், வீரத்தையும், விவேகத்தையும், உன்னத உயிர் தியாகத்தையும், பட்ட துன்பங்களையும், துயரத்தையும், துரோகங்களையும், இருக்கும் தலைமுறை, அடுத்த தலைமுறைக்கு கட்டாயமாக சொல்லியேயாக வேண்டும். அப்படி அடுத்த தலைமுறைக்கு சொல்லி வளர்க்காது போனால் நாம் எமது இனத்துக்கும், தலைமுறைக்கும் செய்யும் கேடும் துரோகமுமாகவே இ;ருக்கு என்றும், அந்த வரலாற்றுத் தவற்றை எவரும் செய்யக்கூடாது என்றும், எமது வரலாற்றை தெரிந்து கொண்டு இனி எமது அடுத்தலைமுறை நேரிடையாகவே அரசியல், சனநாயக பணியில் களம் இறங்கவேண்டும் அது காலத்தின் அவசியம் என்பதையும் தெரிவித்திருந்தார்.
திறாப் தமிழ்ச்சோலையில் கடந்த 20 ஆண்டுகளாக கல்விகற்ற பிள்ளைகள் பலர் பிரான்சு நாட்டின் உயர் இடங்களில் வைத்தியர்களாக, தொழில் நுட்பவியலாளர்கள், கண்டுபிடிப்பாளாகளாக உயர் பணிகளின் இருப்பதை அவர்களுடைய தகமைகள், அவர்களுடைய பணிகள் பற்றி திரையில் காண்பிக்கப்பட்டதோடு அவர்களுக்கான மதிப்பளித்தலும், 20 ஆவது ஆண்டு நினைவு சின்னங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கான மதிப்பளித்தலினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு. ராசன் அவர்கள் செய்திருந்தார். இவருடன் கொலம்பஸ் தமிழ்ச்சங்க தலைவர் இளையவர் நிதுபன் அவர்களும் வழங்கினர். மற்றும் சேர்ஜி தமிழ்ச்சங்க தலைவி செல்வி நிதுசா மற்றும் செயலாளர் ஆகியோர் விளையாட்டுக்களிலும், ஏனைய துறைகளிலும் வெற்றியாளர்களை தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. கிருபா, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு. நிதர்சன், செயற்பாட்டாளர் அருணன் ஆகியோர் வழங்கி மதிப்பளித்ததோடு ஏனைய தமிழர் அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும் வழங்கியிருந்தனர்.
20 ஆண்டுகளாக திறாப் தமிழ்ச்சோலையில் பணியாற்றிய ஆசிரியர்கள், தமிழ்ச்சோலையின் நிர்வாகி திரு. சேத்திரபாலன் அவர்களாலும், பெற்றோர்களாலும் பொன்னாடைகள் போற்றியும், நினைவுபரிசுகளும், மலர்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
நிகழ்வில் அறிவிப்பாளராக கடமையாற்றி கேசவன் அவர்கள் இடைவெளிகள் ஏற்படுகின்ற நேரத்தில் அந்த இடைவெளியை நிரப்பும் விதமாக தமிழில் இதுவரை தெரியாத அறியாத பலவரலாற்று விடயங்களை தெரிவித்திருந்தார். கூடுதலான வரையில் தூயதமிழ்ச் சொற்களை அடுத்த தலைமுறை எடுத்துச் செல்லவேண்டும் என்றும் தமிழால் சிறப்புச் செய்திருந்தார். சிலவேளைகளில் எமது தமிழில் புரையோடிப்போன சொற்களில் ஒன்றான கௌரவப்படுத்துகின்றோம் என்பதன் தூய தமிழ்ச்சொல் மதிப்பளிக்கின்றோம் என்பதையும் சொல்லி மதிப்பளித்திருந்தார்;.
திறாப் வாழ் தமிழ் மக்கள் 10 ஆண்டுகளின் பின் சிறப்பாகத் தமது 20 ஆவது தமிழ்ச்சோலை ஆண்டுவிழாவை பெரியவர்கள், சிறியவர்கள், குழந்தைகள், வேற்று இனமக்களோடு நிறைவாகச் செய்திருந்தனர். மாலை 8.00 மணிக்கு ஆண்டுவிழா இனிதே நிறைவு பெற்றது.
ஊடகப்பிரிவு – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here