மேற்கு சசெக்ஸ் பகுதியில் இரண்டு கார்கள் மோதின …
கனடாவிலிருந்து வந்த
தாயும் மகளும் மரணம்
மகனுக்குப் படுகாயம்!!
சிசெஸ்டர் (Chichester) நகர் அருகே விபத்து நடைபெற்ற Duncton கிராமப் புறத்தில் வீதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டுள்ளது.
அதனால் கார் விபத்து எவ்வாறு நடந்தது என்பது தொடர்பாக நேரில் கண்ட சாட்சியங்கள் இல்லாததால்
பொலீஸார் பொதுமக்களது உதவியை நாடியுள்ளனர். விபத்துத் தொடர்பான தகவல் தெரிந்தவர்களைத் தம்மோடு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு
கேட்டிருக்கின்றனர்.
திருமணக் கொண்டாட்டம் ஒன்றுக்காக கனடாவில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். மகன் காயமடைந்துள்ளார் என்பதை லண்டன்
தமிழ் வட்டாரங்கள் உறுதிசெய்தன.
இவர்கள் பயணம் செய்த பிஎம்டபிள்யூ
காரைச் செலுத்திச் சென்றவர் எனக் கூறப்படும் உறவினரான பெண் ஒருவரும் விபத்தில் சாவடைந்துள்ளார். அவர்களது பெயர் விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.
இரண்டாவது காரில் பயணித்தவர்கள்
யார் என்ற விவரங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.
இங்கிலாந்தின் தென் கிழக்குப் பிரதேசத்தில் மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரண்டு கார்கள் மோதுண்ட வீதி விபத்து ஒன்றில் ஈழத் தமிழர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர், வேறு நால்வர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். உயிரிழந்தவர் களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் அடங்குவர்.
A285 வீதியில் சிசெஸ்டர் (Chichester) பகுதியில் சனிக்கிழமை மாலை இந்தக் கோர விபத்து ஏற்பட்டதாகப் பொலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.
வெள்ளை நிற பிஎம்டபிள்யூ (BMW 220) பழுப்பு நிற மேர்சிடஸ் (Mercedes C200)
ஆகிய இரண்டு கார்கள் மோதிய விபத்தில் பிஎம்டபிள்யூ காரில் பயணித்த மூவரே உயிரிழந்துள்ளனர் நான்காவது நபர் காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார். அடுத்த காரில் பயணித்த மூவரும் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்ற தகவல்களைச் சசெக்ஸ் பொலீஸார் வெளியிட்டுள்ளனர்.