பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான பொண்டி மாநகரத்தின் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் நேற்று 04.06.2023 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு பொதுச்சுடரினை தமிழ்ச்சோலை நிர்வாகி ஏற்றிவைக்கத் தொடர்ந்து பொண்டி மாநகரமுதல்வர் பிரெஞ்சு நாட்டு தேசியக்கொடியினை ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப் பொறுப்பாளர் திரு. சசி அவர்கள் ஏற்றிவைக்க மாவீரர்களுக்கான பொதுப்படத்திற்கு மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சுடர் ஏற்றி, மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து தமிழ்ச்சோலை மாணவர்களின் முழவு வாத்திய இசையுடன், தமிழீழ தேசக்கொடியைத் தாங்கி அணிவகுத்து வந்தனர். இவர்களின் அணிவகுப்பினை மாநகர முதல்வர், மற்றும் மாநகர விளையாட்டுத் துறைக்கு பொறுப்பாக இருப்பவர், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப் பொறுப்பாளர், தமிழ்ச்சங்கங்களின் பொறுப்பாளர், தமிழ்ச்சோலை நிர்வாகி ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
மாணவர்கள் மைதானத்தில் தமது இல்லக் கொடிகளுக்கு முன்னால் அணிவகுத்தனர். தமிழ்ச்சங்கக் கொடியினை பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. செல்வன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து இல்லத்தலைவர்கள் இல்லக் கொடிகளை ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. ஒலிம்பிக் தீபத்தை கடந்த காலத்தில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் கையில் ஏந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறையின் மெய்வல்லுநர் போட்டியின் முகாமையாளர் திரு. ராலிங்கம் அவர்கள் அவர்கள் வேட்டுவைத்து தொடக்கி வைக்க மைதானத்தை மக்களின் கரவொலியோடு சுற்றிவந்து ஒலிம்பிக் சுடர் பீடத்தில் சங்கமித்து வீரர்களுக்கான சத்தியப்பிரமாணமும், நடுவர்களுக்குமான பிரமாணமும் நடைபெற்றது.
பாரதி, வள்ளுவன், ஒளவையார் இல்ல மாணவ, மாணவிகள் பாலர் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த உற்சாகமாக விளையாட்டுக்களில் பங்கு பற்றியிருந்தனர். வெற்றிபெற்ற வீரர்களுக்கு மாநகர உதவி முதல்வர் மற்றும் முக்கியஸ்தர்கள், உப கட்டமைப்புப் பொறுப்பாளர்கள், கடமையில் ஈடுபட்ட நடுவர்கள், தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள், தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.
காலநிலை மாற்றத்தால் வெய்யில் சற்று அதிகமாக இருந்திருந்தாலும் போட்டியாளர்கள் உற்சாகமாக பங்கு பற்றினர். விசேடமாக பெற்றோர்களுக்கான தடகளப்போட்டிகளும் இடம்பெற்றன. அழைப்பு விடுத்து குறுகிய நேரத்திற்குள் 50 இறகும் மேற்றபட்ட பெற்றோர்கள் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இவர்களை அவர்களின் குழந்தைகளே உற்சாகப்படுத்தியமை சிறப்பாக எல்லோராலும் இரசிக்கக்கூடியதாக இருந்தது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் சிறப்புரையையும், பொண்டி மக்களின் தாய்மண் பற்றையும், சகல துறைகளிலும் தொடர்ந்து வீழ்ந்து விடாத வீரமாக பயணிக்க வேண்டும் என்றும் அதற்கு உறுதுணையாக இருக்கும் அனைவரின் கரங்களை இறுகப் பற்றிக் கொள்வதாகவும், இன்றைய போட்டியில் நடுவர்களாக கடமையாற்றிய நடுவர்களையும் பாராட்டியிருந்தார். பிராங்கோ தமிழ்ச்சங்கம், தமிழர் விளையாட்டு துறை, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக அவர்களை பாராட்டியதோடு, அவர்களுக்கு மெய்வல்லுநர் போட்டியின் துணை முகாமையாளர் திரு பீலிக்ஸ அவர்களால்,மற்றும் முகாமையாள திரு. ராஐலிங்கம், விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர். திரு. கிருபா ஆகியோராலும் கை கொடுக்க, நினைவுப் பதக்கங்களை பொண்டி பிராங்கோ தமிழ்சங்கத் தலைவர் நடுவர்களுக்கு அணிவித்து மக்களின் கரகோசங்களால் சிறந்த வகையில் மதிப்பளிப்புச் செய்தனர்.
சிறப்பு நிகழ்வாக பொண்டி இளையதமிழ் மாணவர்களின் உதைபந்தாட்டப்போட்டியும் நட்புரீதியாக நடைபெற்றது. சங்கத்தின் வளர்ச்சிக்காக நல்வாய்ப்புச் சீட்டிழுப்பும் நடாத்தப்பட்டது. அதற்கான பெறுமதிமிக்க பரிசில்களை அப்பிரதே வர்த்தகர்கள் நன்கொடையாக வழங்கியிருந்தனர்.
வெற்றிக் கிண்ணங்களை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் பங்குபற்றிய கட்டமைப்புக் பொறுப்பாளர்கள் வழங்கி மதிப்பளித்தனர். வள்ளுவர் இல்லம் 401 புள்ளிகளையும், 315 புள்ளிகளை பாரதி இல்லமும், 314 புள்ளிகளை ஓளவையார் இல்லம் பெற்றுக்கொண்டது. இறுதியில் இல்லக் கொடிகள், சங்கக் கொடி, தேசியக்கொடிகள் இறக்கி வைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் தாரகமந்திரத்தை உச்சரித்து போட்டி நிகழ்வு நிறைவு பெற்றது.
(தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு – ஊடகப்பிரிவு)