தாயகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கலில், அதற்கு உறுதுணையாக புத்த சிலைகளை நடுதல், பெரும் விகாரைகளைக் கட்டுதல், இராணுவத் தேவைக்கெனக் கூறியும், தொல்பொருள் ஆராட்சிக்கு என்று தெரிவித்தும் தமிழர் நிலங்களை அபகரித்தல், இதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகளை மீறி காவல்துறையினர், இராணுவ ஆக்கிரமிப்பும், இதற்கு எதிராக போராடும் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்தல், இராணுவ உளவுப்பிரிவினால் படங்கள் எடுக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் வதைமுகாம்களுக்கு அழைத்து விசாரணை செய்தல், மறைமுக முகவர்கள் மூலம் கொலை எச்சரிக்கை விடுதல் மற்றும் தாயகத்தில் இன ஒற்றுமை என்ற பெயரில் தொடர்ச்சியாக நடைபெறும், தமிழ் மக்களை அவர்களது நிலங்களில் இருந்து வெளியேற்றும் செயல் திட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றமையை பிரெஞ்சு அரசுக்கும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேசத்துக்கும் கொண்டு செல்லும் வகையில் தொடர்ச்சியாகக் கடிதங்கள் மூலம் தெரிவித்தமையோடு நின்றுவிடாமல், பிரெஞ்சு அரசு இவ்விடயங்களைக் கருத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தியும், பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர் திருமதி Soumya Bourouaha, பாராளுமன்ற உறுப்பினர் அத்துடன் சிறி லங்கா பிரான்சு நாடுகளுக்கு இடையான பிரெஞ்சு பாராளுமன்ற நட்புக்குழுவின் உறுப்பினர் அவர்களுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர், செவ்வாளியே திருமதி Marie George Buffet அவர்களுடனும், தமிழின அழிப்பைத் தொடர்ந்து செய்து வரும் சிங்கள தேசத்தின் செயற்பாடுகள் பற்றியும், இதனை தெரியப்படுத்தும் வகையில் 31.05.2023 நேற்று ஒரு சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.
தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் தமிழ்மக்கள் முன்னெடுக்கும் பல்வேறு சனநாயக அரசியல் போராட்டங்கள் பற்றியும் இதற்கு ஐரோப்பிய அரசும், ஒன்றியமும் கரிசனை காட்டவேண்டும் என்று சந்திப்பினை மேற்கொண்ட மக்கள் பேரவை உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது, இதே காலப்பகுதியில் 31 மே 1981 இல் தான் தென்கிழக்கு ஆசியாவில் மிகப் பெரிதான 97000 நூல்கள் கொண்ட, தமிழர் வரலாற்று அடையாளம் – தமிழின காலாச்சார இனப்படுகொலைக்கான சாட்சியமாக, இந்த நூல் நிலைய எரிப்பு இருக்கின்றது என்பதை கூறியதோடு, 23 ஜூலை 2023 இல் , தமிழின அழிப்பின் ஆதாரமாக விளங்கும் 83 கறுப்பு ஜூலை இனஅழிப்பு நடைபெற்று 40 வருடங்கள் ஆகிறது என்றும் கூறப்பட்டது.
இவற்றை வலியுறுத்தி பிரெஞ்சு அரசை நோக்கி பல செயற்பாடுகளுக்குத் தாம் பக்க துணையாக இருப்போம் என்பதை எமக்கு உறுதிப்படுத்தினார்.
தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.