“ வரலாற்றுச்சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக்கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி ,எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகின்றேன்’’ என்று தமிழீழத் தேசியத்தலைவர் 2008 ஆம் ஆண்டு மாவீரர்நாள் கொள்கைப் பிரகடன உரையில் கூறியிருந்தார்.
அதற்கு மதிப்பளித்து தமிழர்களுக்கு தேசம் என்றால் தமிழீழமே என்ற உணர்வை இன்று உலகம் புரிந்து கொண்டுள்ள நிலையில் சிங்கள தேசத்தின் பொய்யான பரப்புரைக்கு துணைபோய் எமது போராட்டப் பலத்தைத்தான் சிங்களத்தால் குறைக்க முடிந்தது. அவர்கள் விரும்பியோ, விரும்பாமலே தெரியாது தமிழர்களின் அரசியல், சனநாயக பலத்தை இன்னும் அதிகரிக்கத்தான் வைத்துள்ளது. சிங்களத்தின் திட்டமிட்ட பயமுறுத்தல் கேட்க நாதியற்றவர்கள் என்ற எண்ணம் மேலோங்கி எமது கண்முன்னால் குறுகிய காலத்தில், குறுகிய இடத்தில், குறுகிய நேரத்தில் கோழைத்தனமாக தமிழர்களை கொன்றொழித்து வெற்றி கண்டது. இன்று அதன் 14 ஆண்டுகள் ஆனாலும் அது நீறுபூத்த நெருப்பாக அணையாது உலகமெல்லாம் தமிழர்கள் வாழும் நாடுகளில் மனிதர்களின் மனதில் எரிந்து கொண்டே இருக்கின்றது.
மொறிசியஸ் தேசத்தில் அதன் வெளிப்பாட்டை 2023 மே 18 காணக்கூடியதாக இருந்தது. முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவாக மொறிசியஸ் நாட்டில் நாட்டப்பட்ட நினைவுக்கல்லின் முன்பாக அந்தநாட்டின் அதிபர், அரசியல் பிரமுகர்கள், இனப்பற்றாளர்கள் என பலர் கலந்து கொண்டு நினைவேந்தல் செய்திருந்ததுடன், தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும் என்ற மாபெரும் பேரணியையும் நடாத்தியிருந்தார்கள். தமது உணர்வுமிக்க கருத்துக்களையும், அரசுக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவித்திருந்தனர். இதற்கு கனடா தேச அதிபரின் தமிழினப் படுகொலை என்ற செற்பதம் எதிர்காலத்தில் எமக்கான நியாயப்பாட்டை துணிந்து முன்வைப்பதற்கு ஓர் ஆரம்ப சுழியாகவும் அமையலாம்.
தமிழீழ தேசத்தை அங்கீகரிக்கும் ஒரு நாடாக மொறிசியஸ் நாடும் மக்களும் இருப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு இருப்பதும் இதே போன்று தமிழர்கள் வாழும் நாடுகள், ஆபிரிக்கா, அரேபிய நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த தமிழின அழிப்பை நாட்களையும் காலத்தையும் மறக்காமல் நினைவேந்தல் செய்வது எம்மையும் எமது அடையவேண்டிய குறிக்கேளுக்கும் வலுவை ஏற்படுத்தும். ஆனால் நாம் இவற்றை செய்வதுடன் எம்மிடம் உள்ள இனஅழிப்பின் சாட்சியங்களை சர்வதேசத்திற்கு வழங்க வேண்டும்; அது உயிரை துச்சமெனக் கொடுத்த எமது வரலாற்று புருசர்களுக்கு நாம் செய்யும் கைமாறு ஆகும்.
மொறிசியஸ் வாழ் மக்கள் என்று தமிழீழ விடுதலைப்போராட்டம் முகிழ்விட்டு பெரிதாக உருவாகியதோ அன்றிலிருந்தே தமது பங்கை ஆற்றிக்கொண்டேயிருக்கின்றனர். சர்வதேசத் தமிழர்கள், ஐரோப்பிய தமிழர்கள், மற்றும் தமிழகவாழ் தமிழர்களின் உணர்வுகளுக்கு ஈடாக தமது பணியை தம் இனத்திற்கு செய்தே வருகின்றனர்.
இன்று நியாயத்திற்காக , உண்மைக்காக செய்ய வேண்டிய மலேசியா, சிங்கப்பூர் நாடுகள் தமது வரலாற்றுக்கடமையில் இருந்து பின்நிற்பது மிகுந்த வேதனையளித்தாலும் ஒருநாள் இந்த மக்களும் நியாயத்தின் பின்னால் நிற்பார்கள் அதற்கு ஓர் நல்ல உதாரணம் மொறிசியஸ் தேசம். அவர்களுடன் தமிழன் என்ற உணர்வால், தமிழர்களுக்கான தேசம், மொழி, மண், பண்பாடு கலாசாரம் இனவிடுதலைப்பற்று என்ற உன்னத உணர்வேடு தொடர்ந்தும் விடுதலை இலக்கை அடையும் வரை கைகோர்த்து நிற்போம்.
– பிரான்சு வாழ் தமிழர்கள்; தமிழீழ மக்கள் பேரவை – பரப்புரை மக்கள் தொடர்பு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.