நகரை சுற்றிவளைக்க உக்ரைன் முயற்சி!
உக்ரைனின் முக்கியம் வாய்ந்த கிழக்கு நகரான பக்மூதை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்திருக்கும் நிலையில் அந்த நகரை சுற்றி வளைக்கும் நோக்கில் நகரின் எல்லைகளை நோக்கி படைகள் முன்னேறி வருவதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
பக்மூத் நகரை கைப்பற்றும் நடவடிக்கை பூர்த்தி செய்யப்பட்டதாக ரஷ்யா கடந்த சனிக்கிழமை (20) அறிவித்திருந்தது. இது உறுதி செய்யப்படும் பட்சத்தில் கடந்த 15 மாதங்களாக நீடிக்கும் போரின் மிகக் கடினமான மற்றும் அதிக உயிரிழப்புக் கொண்ட மோதல் ஒன்றின் முடிவாக அது அமையும். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது இராணுவம மற்றும் வக்னர் தனியார் படைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
எனினும் பக்மூத்தின் சிறு பகுதியில் உக்ரைனிய படையினர் தொடர்ந்து போரிட்டு வருவதாகவும் நிலைமை மாறும்போது நகருக்குள் நுழைய அது வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் உக்ரைனிய இராணுவம் ஞாயிறன்று (21) குறிப்பிட்டது.
உக்ரைனிய ஜெனரல் ஒலெக்சான்டர் சிர்ஸ்கி டெலிகிராம் பதிவு ஒன்றில், புறநகர் பகுதிகளில் ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக உக்ரைனிய படை முன்னேறி வருவதாகவும் 70,000 மக்கள் வசிக்கும் நகர் மீது மூலோபாய ரீதியில் சுற்றிவளைப்பு ஒன்றை நெருங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பக்மூத் நகர் இராணுவ மூலோபாயம் அற்ற பகுதி என்று இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிட்டபோதும் அந்த நகரை கைப்பற்றியது தொழில்துறை பிராந்தியமான டொன்பாஸை நோக்கி ஆழமாக முன்னேற உதவும் என்று ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
உப்பு மற்றும் ஜிப்சம் சுரங்கங்களால் சூழ்ந்த பக்மூத் நகரம், முக்கிய தொழில்துறை மையமாக இருந்தது. உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், பாக்மூத்தில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளனார். அந்த நகரைக் கைப்பற்றினால், அது ரஷ்யா கைப்பற்ற விரும்பும் கிரமாடோக்ஸ், ஸ்லோவியான்ஸ்க் பகுதிகளை நோக்கி அந்நாட்டுப் படைகள் முன்னேற வழிவகுக்கும்.