‘முள்ளிவாய்க்கால்’ இனப்படுகொலையின் 14வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை பிராங்கோ நெவர் தமிழ்ச் சங்கமும், நெவர் தமிழ்ச் சோலையும் இணைந்து 18-05-2023 அன்று வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் Parc Roger Salengro, 10 Av Général de Gaulle,58000 Nevers. எனும் இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வலிசுமந்த வைகாசி மாதத்தின் நினைவலைகள் சுருக்கமாக எடுத்தியம்பப்பட்டது.பின்னர் பொதுச்சுடரினை பிரான்ஸ் நாட்டு Onet நிறுவன பொறுப்பாளர் ஏற்றி வைத்தார்.அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபிக்கான சுடரினை பிராங்கோ நெவர் தமிழ்ச்சங்கத் தலைவர் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் மண்ணில் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை இழந்த திருமதி தியாகராசா ஜெயகௌரி அவர்களால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழ்ச் சோலை பள்ளி மாணவிகளால் தமிழ் மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும் அகவணக்கம் நிகழ்த்தப் பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களால் மலர்வணக்கம் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ‘முள்ளிவாய்க்கால்’ தமிழின படுகொலையின் நினைவலைகள் பற்றி பிரெஞ்சு மொழியில் நெவர் வாழ் பங்குத்தந்தை John baffier அவர்கள் உரையாற்ற அவ்வலி சுமந்த முள்ளிமண் பற்றி எமது தாய் மொழியில் திருவாளர் அழகக்கோன் சந்திரகாந்தன் அவர்கள் எடுத்தியம்பினார்.
அதனைத் தொடர்ந்து தமிழர் வரலாற்றில் எல்லோர் நெஞ்சங்களிலும் வடுவழியாத தினமான ‘இனவழிப்பு தினம்’ எனும் தலைப்பில் பிராங்கோ நெவர் தமிழ்ச் சங்க உறுப்பினர் கவி பாடினார்.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கப்பட்டது.பின்னர் தமிழரின் தாரகமான மந்திரமான ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ‘ எனும் முழக்கத்துடன் மாலை 5.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.