அரசியல் ரீதியாக அடிபணிந்து உரிமையைப் பெற தயாரில்லை வடக்கு முதலமைச்சர் தெரிவிப்பு

0
176

wickneswaranஅரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெற நாங்கள் தயாராக இல்லை. தெற்கிலிருந்து எமது தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு வன்முறைகளினால் வெளியேற்றப்பட்டார்களோ அதேபோல் வடகிழக்கு வாழ் தமிழ் மக்களினையும் வெளியேற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறு இராணுவ மற்றும் அரசின் பிடிக்குள் சிக்கித்தவித்து பல இழப்புகளின் மத்தியில் தான் வட மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டு நியதிச் சட்டம் சமர்ப்பிக்கப்படுகின்றது என வட மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 22ஆவது அமர்வு கைதடி யிலுள்ள பேரவைப் செயலக கட்டத்தில் நேற்றுக் காலை 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இதில் 2015 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் சம்பந்தமான அறிமுகவுரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், எமது சபை வட மாகாணத்தை நிர்வகிக்கத் தொடங்கி ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் ஆகின்றன. 2015-ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தைச் சமர்ப்பிக்க முன்னர் ஒருசில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளல் அவசியம் என்று எண்ணுகின்றேன். எமது வட மாகாணம் பாரிய போரினால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசம். 2009-ம் ஆண்டு போர் முடிந்திருந்தாலும் போரின் தாக்கம் பல வருடங்களுக்குத் தொடரும் என்பதை நாங்கள் மறக்கக் கூடாது. பல சமயங்களில் பல தலைமுறைகளை இத் தாக்கம் பாதித்திருக்கின்றது என்பதையும் நாங்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். மாகாணசபை வழிமுறையானது அதிகாரப் பகிர்வை அடியொட்டியே இயற்றப்பட்டது.   ஆனால் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் நிறைவேற்று அதிகாரம் ொண்ட ஜனா திபதியின் அதிகாரங்களை மேலும் வலு அடையச் செய்வதாகவே காணக் கூடியதாக உள்ளது. ஆளுநர் அத்தகைய ஜனாதிபதியின் முகவராகச் செயற்படுகின்றார். மாகாண சபை யால் எந்த ஒரு நியமனத்தையும் ஆளுநரின் அனுமதியின்றி வழங்க முடியாது. வடமாகாண முதலமைச்சரின் கருத்தொருமித்தலுடன் பிரதம செயலாளரை நியமிக்க வேண்டும் என்று சட்டம் கூறினாலும் ஜனாதிபதி இது பற்றித் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதை எவரும்; தட்டிக் கேட்க முடியாத நிலையே தற்பொழுது நிலைபெற்றிருக்கின்றது. இராணுவமே தொடர்ந்து வடமாகாணத்தை நிர்வகித்து வருவதான ஒரு நிலையை போரின் போதான வடமாகாண யாழ்ப்படைத் தலை வரும் தற்போதைய வடமாகாண ஆளுநருமான இரண்டாம் பதவிக்காலம் பெற்றுள்ள ஆளுநர் ஏற்படுத்தி வருகின்றார். எமது அலு வலர்கள் அப்பேர்ப்பட்ட ஒரு ஆளுநரின் அதிகாரத்திற்கு அடிபணிந்தே போக வேண்டிய ஒரு நிலையில் உள்ளார்கள். எமது பிரதி நிதிகளிலும் பார்க்க ஆளுநரின் ஆக்ஞைகளுக்கே அவசிய மரியாதை கொடுக்கின்றார்கள். எமது ஒருவருடகால அனுபவமானது பதின் மூன்றாவது திருத்தச்சட்டம் எமது வடகிழ க்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கூறிய சிலரின் கனவைச் சிதைப்பதாகவே அமைந்துள்ளது. அரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெற நாங்கள் தயாராக இல்லை என்பதையும் இத்தருணத்தில் கூறி வைக்கின்றேன். எமது மக்களின் தனித்துவத்தை, தன்மானத்தை, தகைமைகளைத் தகர்த்தெறியவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எமது பாரம்பரிய இனப்பரம்பல் பரிதாபகரமாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது. தெற்கில் இருந்து எமது தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு வன்முறைகளினால் அப்பிரதேசங்களை விட்டு வெளியேற்றப்பட்டார்களோ அதே போல் வட கிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறவும் வெளியார்கள் வந்து குடியமர வழி அமைக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றா ர்கள் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here