பிரான்சு பரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான கார்ஜ் சார்சல் பகுதியில் மாவீரர் லெப்ரினன்ட் சங்கர் அவர்களின் நினைவுத்தூபி அமைக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவு தினமான இன்று (17.05.2023) புதன்கிழமை பிற்பகல் 18.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் கார்ஜ் சார்சல் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கார்லே கோணேஸ் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் Ramzi ZINAOUI அவர்களும் பிரெஞ்சுத் தேசியக்கொடியை சார்சல் நகரபிதா Patric HADDAD அவர்களும் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை கார்ஜ் நகரபிதா Benoit Jimenez அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச் சுடரினை கார்ஜ் சார்சல் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. டக்ளஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெற்றது. லெப்ரினன்ட் சங்கர் அவர்களின் திருஉருவப் படத்திற்கான மலர்மாலையை சார்சல் துணை நகர பிதா திருமதி Laura Menaceur அவர்கள் அணிவித்தார்.
நினைவுத் தூபிக்கு முன்பாக விருந்தினர்கள் அனைவரும் மலர்வளையம் வைத்து வணக்கம் செலுத்தினர்.
மலர்வணக்கத்தை தொடர்ர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து கார்ஜ் சார்சல் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. டக்ளஸ் அவர்கள், வரவேற்புரையை வழங்கினார்.
நினைவுரைகளும் இடம்பெற்றன.
சிறப்பு நிகழ்வாக முள்ளிவாய்க்கால் இறுதி வார நாட்களை நினைவு கூரும் முகமாக கலந்துகொண்ட அனைவருக்கும் இலைக்கஞ்சி வழங்கப்பட்டது. நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வு நிறைவுகண்டது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)