“உள்ளிருந்து குமுறும் நெருப்பு ”
———————————–
தமிழை உரைத்த இனி
வருவாளா மீண்டும் இனி
அரசியல் புரட்சி மொழி
இன்று கொடுத்தோமே பலி
மௌனத்தில் புதைத்தாள்
மரண வதைகளை அன்று
மௌனியாய் துயில்கிறாள்
வீரமகள் பேழையில் இன்று
காடையரின் கைக்கூலிகளே வாரும்
காவுகொடுத்த உயிரின் கதை கேளும்
மாற்றானுக்கு மாலையிடும் மடையர்களே வாரும்
மங்கையை இழந்ததன் பின்னணியைப் பாரும்
மரணத்தின் பின் முழக்கமிடும் மகான்களே
அரவணைக்கா உம் அனுதாபம்
அந்தியேட்டி பதாதையிலும்
அனைத்துலக செய்தியிலும் எதற்கு ..?
தலைமைப் போராளியையே மறந்த
தமிழ்பேசும் தனவான்களே ..
தாயப்பூமியில் இன்னும் எத்தனையோ
தமிழினியர் தவிக்கிறாரையா ..!
கோடி விலை கொடுத்து நயன்தாரவையும்
கொட்டகை மேளமிட்டு நமீதாவையும்
கூப்பி அழைக்கும் பறந்துபோன பறவைகளே
பார்வையை கொஞ்சம் திருப்பிப் பாருங்கள்
வெள்ளையனுக்கு பிறந்தவன் என்ற எண்ணத்தில்
வீராப்பு மொழியுரைக்கும் வித்தகர்களே
எதிரியுடன் கைநனைக்கும் எம்மினப் புறாக்களே
இவளின் கதையையும் கருத்தினிலே பாரும்
துயிலட்டும் தீபமொன்று
எரியட்டும் மனதில் என்றும்
தீபங்களைத் தானே அழிக்கலாம்
தமிழனின் தியாகம் தீயாய் வாழும்
————–” வன்னியூர் செந்தூரன் “——