நான் தமிழீழத்தில் நின்ற காலங்களில் அதிகமாக சந்தித்து உரையாடிய, கருத்துக்களை பகிர்ந்துகொண்ட முக்கியப் பொறுப்பாளர்களில் ஒருவர் தங்கை தமிழினி. அரசியல், கலை இலக்கியம், பெண்விடுதலை, தமிழீழ விடுதலைப் போராட்டம், அண்ணன் பிரபாகரன் அவர்களின் ஆளுமைத் திறன், விடுதலைப் போராடக் காலத்தில் போராளிகளுக்குள் மலரும் காதல், இயக்கம் அதைக் கையாளும் விதம், பெண் போராளிகளுக்கு பெண்ணியம் சார்ந்த வகுப்புகள் நடத்தப்படவேண்டிய தேவை குறித்து பல நாட்கள் பலமணிநேரங்கள் கலந்துரையாடியிருக்கிறோம். என்னை அண்ணா… என்று அன்பொழுக அழைக்கும் அன்புத் தங்கை அவர். என்னையும் என் ஓவியங்களையும் ஆழமாக உள்வாங்கியவர். மிகத் தெளிவாக கருத்துகளை வெளிப்படுத்தும் அற்புதமான பேச்சாளர். மிக ஆழமான வாசகர். ரசிகர். எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் உடையவர்….தமிழீழம் கிளிநொச்சியில் நடைபெற்ற என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி, மற்றும் புயலின் நிறங்கள் ஓவிய நூல் வெளியீட்டு நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றினார். வேறுசில நிகழ்வுகளிலும் நாங்கள் இருவரும் கலந்துகொண்டிருக்கிறோம்.
முள்ளிவைக்காளுக்குப் பிறகு அவர் சரணடைந்த செய்தியறிந்தேன். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அவர் அனுபவித்து வரும் சித்திரவதைகள் குறித்த செய்திகள் கசிந்து என்னை வந்தடைந்த போது எனக்கு மிகவும் வேதனையாகவும் துன்பம் தருவதாகவும் இருந்தன. அந் நேரத்தில் எல்லாம் போராளிக்கே உரிய கம்பீரமான அவரின் தோற்றப் பொலிவு என் கண்களில் நிழலாடும்…..
சில மாதங்களுக்கு முன் என்னோடு தொடர்புக்கு வந்தார். நான் அடைந்த மகிழ்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. வணக்கம் அண்ணா, நலமேயுள்ளேன். இலங்கையில்தான் இருக்கிறேன். உங்களின் தொடர்பு கிடைத்தையிட்டு மிகவும் மகிழ்ச்சி. உங்களின் ஓவியப்பணிகள் தொடர எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். என்று செய்தியும் அனுப்பினார்.
அவர் எழுதிய சில கவிதைகள் மற்றும் சிறுகதைகளை படித்து மகிழ்ந்தேன். அவர் உடல் மற்றும் மனக் காயங்களிலிருந்து மீண்டுவிட்டார் என்றே எண்ணியிருந்தேன்… ஆனால் இவ்வளவு விரைவாக நம்மை விட்டுச் செல்வார் என்று எண்ணவில்லை.
தமிழினி… தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எண்ணிலடங்கா வரலாற்றுச் சுவடுகளில்…
நீங்கா இடம் பிடித்திருக்கிறீர்கள். என்னோடு நீங்கள் பேசியவை என் காதுகளில் என்றும் ஒலித்துக்கொண்டே….இருக்கும். நாம் அமர்ந்து பேசிய அந்த இடங்களும் உங்கள் உடல்மொழியும் என் கண்களில் என்றும் நிழலாடிக் கொண்டேயிருக்கும்.
தங்கையே….தமிழினியே….சென்று வா….
உனக்கு என் வீர வணக்கம்.
ஓவியர் புகழேந்தி.
19.10.2015.