தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவு மகளிர் அணிப் பொறுப்பாளராக வலம் வந்த போராளி தமிழினி(சிவகாமி ஜெயக்குமரன்) அவர்களுக்கு எங்கள் கண்ணீர் வணக்கம் !
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவு மகளிர் அணிப் பொறுப்பாளராக வலம் வந்த போராளி தமிழினி தலைவனையும் தமிழ் மக்களையும் தனக்கும் மேலாக நேசித்த ஒரு போராளி, ஒரு விடுதலைப் பற்றாளி 18.10.2015 காலமான செய்திகேட்டு மனம் வருந்தி நிற்கின்றோம். எம் மக்களுக்காக அல்லும் பகலும் இயங்கிக்கொண்டிருந்த எங்கள் தமிழினி அவர்களின் இழப்பு எம் சமூகத்தில் எங்களோடு அன்றாடம் பழகிய ஒருவரை நாம் இழந்துவிட்டோம் என்பதுபோன்ற உணர்வலைகளை எம்முள்ளே தோற்றுவிக்கின்றது. அதற்கான காரணமாக தமிழினத்திற்கு, குறிப்பாக சிங்கள பாசிசவாதிகளின் வன்முறைக்கு ஆளான தமிழ்ப் பெண்களுக்கும் அதனை எதிர்த்த வீரத் தமிழ்ப் பெண்களிற்கும் சாட்சியாக அவர் விளங்குகின்றார் என்பதாகவே கருதுகின்றோம்.
1991 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்து, 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற் பிரிவு மகளிர் அணிப் பொறுப்பாளராக விளங்கிய இவர், தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் தமிழீழ பெண்களின் நலன் மற்றும் அவர்களின் உயர்வுக்காகவும் செயற்பட்டுவந்தவர். பெண் போராளிகளிடையே தன்னம்பிக்கை வளர்த்து, உலக அறிவு, மற்றும் காலத்திற்கேற்ற அரசியல் நிலைமை போன்ற விடயங்களில் அவர்கள் தேர்ச்சி பெறவுமென கடுமையாக உழைத்து வந்தவர்.
தமிழீழ விடுதலைக்கும் தமிழ் மக்களின் கௌரவமான வாழ்விற்காகவும் தன்னை அர்ப்பணித்த இந்த வீரபெண் தமிழீழத் தேசியத் தலைவரின் சீரிய பார்வையில் வளர்ந்தவர் என்பதுவே அவரது ஆழுமைக்கும், இறுதி வரை கொண்டிருந்த உறுதிப்பாட்டிற்கும் ஆதாரமாகின்றது. மக்களும் விடுதலைப் புலிகளும் வேறு வேறல்ல என்பதைத் தெரிவிப்பதற்காகவும் அதில் பெண்களின் பங்களிப்பு என்பது இன்றியமையாதது என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுப்பதற்காகவும் அவரது பாதங்கள் நடக்காத பூமியில்லை என்றே கூறலாம்.
தமிழ் மக்களை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள பாசிச இராணுவம் எமது மண்ணிலிருந்து அகற்றப்படல், தமிழ் மக்கள் மீது நடாத்தப்படும் படுகொலைகள், குறிப்பாக தமிழ் பெண்கள் மீது சிங்கள இராணுவக் காடையர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் பாலியல் கொடுமைகளுக்கும் முடிவுகட்டல், தமிழ் மக்கள் தமக்கான ஒரு பலமான அரசினை கட்டியமைத்தல், அதில் குறிப்பாக தமிழ்ப் பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தப்படுத்தல், மற்றும் தமிழ் சமூகத்தில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை மீட்டெடுத்தல் போன்ற சிந்தினைகளுடன் உலகில் நல்ல தலைவனைப் பெற்ற எல்லா இனப் பெண்கள்போலவும் எங்கள் பெண்களும் வாழவேண்டும் என்ற கனாவோடு வலம்வந்தவர் தமிழினி. அத்துடன் தமிழீழ தனியரசின் இறையான்மை மிக்க ஆட்சி அதிகாரம்தான் தமிழ் மக்களின் உரிமைகளை சர்வதேச சமூகத்தின் சட்டவரைபுகளுக்கு அமைவாகக் காத்துக்கொள்ளத் துணைபுரியும் என்பதையும் தெளிவாகப் புரிந்தவராக அந்த மாபெரும் தலைவனுக்கு பக்கபலமாக நின்றார்.
இன்று அவர் எம்முடன் இல்லை. இவரைப் போன்று விடுதலைப் போரில் தம்மை முழுமையாக அர்பணித்து விழுப்புண் அடைந்தும் நோய்வாய்ப்பட்டும் பல போராளிகள் அண்மைக்காலங்களில் சாவடைந்துள்ளார்கள். அவர்களின் தாயக விடுதலை வேட்கையை எவராலும் அழித்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது. எமக்காகக் களமாடியவர்களுக்கு நாம் செய்யவேண்டிய இறுதி மரியாதையை செய்யமுடியாத சமூகமாய் இன்று நாம் நிற்கின்றோம் என்பதே எம்மை வாட்டுகின்றது. ஆனாலும் ஒரு வீரன் விழும்போது தன்னைத் தூக்க எவன் வருவான் என்று பாராமல் தனது ஆயுதத்தை எவன் தூக்கி அதே பாதையில் நடக்கின்றான் என்பதையே எதிர்பார்ப்பான். அந்த வகையில் தமிழின விடியலுக்காய் இறுதிவரை உழைத்து உயிர் பிரிந்த உங்கள் ஒவ்வொருவரது இலட்சியத்தினையும் நாங்கள் சுமந்து செல்கின்றோம். எங்கள் வாழ்விற்காய் உங்களை வருத்தி நீங்கள் சிந்திய இரத்தத்தையும் வியர்வையினையும் தமிழர் நாம் மறவோம்.
இலக்கு வெல்லும்வரை உங்களது கனவோடு எமது பயணம் தொடரும் என்பதை உறுதியோடு கூறிக்கொண்டு போராளி தமிழினியின் மறைவால் துயருறும் அவருது குடும்பத்தாருக்கும், சக நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு இவரது இழப்பினைத் தாங்கமுடியாது வேதனையுறும் பல்லோப இலட்சம் மக்களுடன் நாமும் கரம்சேர்த்துக் கொள்கின்றோம்.
<p>”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”</p>
அனைத்துலக தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.