தமிழின அழிப்புநாள் மே 18 ஒன்றுகூடல் பற்றி பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை!

0
101

தமிழின அழிப்புநாள் மே 18 (14 ஆவது ஆண்டு) ஒன்றுகூடல் பற்றி பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை காலத்தின் தேவை கருதி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் முழு வடிவம் வருமாறு:-


அன்பான தமிழீழ மக்களே! தமிழின அழிப்பு “ முள்ளிவாய்க்கால் ( 14 ஆவது ஆண்டின்) நீங்காத நினைவுடன் எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும், நம்பிக்கைத் துரோகங்களுக்கும் நீதி வேண்டி எமது மக்கள் வகை தொகையின்றியும் ஈவிரக்கமின்றியும் கொத்துக்குண்டுகளால், விமானக் குண்டுவீச்சுக்களால், எறிகணைகளால் கொல்லப்பட்ட இந்நாட்களில் நெஞ்சு மறக்க முடியாத வேதனையான நினைவுகளுடன் கண்ணீரோடும் , உணர்வுப் பெருக்கோடும் சர்வதேசத்திடம் நீதி வேண்டியே நிற்கின்றோம். தாயக மக்களின் உணர்வுகளுடன் புலம்பெயர்ந்த மக்கள் நாமும் பங்கெடுத்து பல அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளின் ஊடாக, சனநாயகப் போராட்டத்தின் ஊடாகவும் எமது இனத்தின் நியாயத்தை எடுத்தியம்பி வருகின்றோம்.
பிரான்சில் பல மாநகரங்களில் மே 1ஆம் நாள் முதல் 18 ஆம் நாள் வரையும் அதனைக் கடந்தும், நிழற்படக் கண்காட்சிகளையும், இன அழிப்புக்குள்ளான மக்களின் நினைவையும் மனதில் சுமந்து வணக்க நிகழ்வுகளை நடாத்துவதுடன், மே 18 ஆம் நாள் ( வியாழக்கிழமை ) நண்பகல் 2.00 மணிக்கு பாரிசின் புறநகர் வாழ் தமிழீழ மக்களை ஒன்றிணைத்து, பாரிசின் மத்தியில் பஸ்தில் திடலில் கவனயீர்ப்பு நினைவேந்தல் நிகழ்வையும் நாடாத்துவதற்கு, தேசம் நோக்கி இப்பணிகளில் காலாகாலம் ஈடுபட்டு வரும் அனைத்துக்கட்டமைப்புகளின் ஆலோசனையுடனும், எமது மக்களின் பாதுகாப்போடு முன்னெடுக்கப்படும் நிகழ்வு என்பவற்றை கருத்தில் கொண்டும் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. இதேவேளை, பிரான்சில் நீறுபூத்த நெருப்பாக இருந்து கொண்டிருக்கும் ஓய்வூதியத்திற்கு எதிரான போராட்டம், அனைத்து தொழிலாளர்களின் போராட்டம் முற்றுப்பெறாத நிலையிலும், எம்மால் ஒரு பேரணியை செய்வதைவிட ஒரேஇடத்தில் அனைத்து மக்களுடனும் கவனயீர்ப்பு நிகழ்வை நடாத்துவது காலத்திற்கு பொருத்தமாகவே அமையும் என்பதை தூரநோக்குடன் சிந்தித்துத் தீர்மானிக்கப்பட்டு ஒழுங்கும் செய்யப்பட்டது.
எழுச்சி ஊர்வலமாக, நாம் செய்வதாக இருந்தால், அதற்கான அனுமதி எங்களால் பெறமுடியும், அதற்கு காவல்துறை எங்களுக்கு அனுமதி தரவில்லை என்ற கருத்து பிழையானது என்பதை இத்தால் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். கடந்த காலம்போன்று எழுச்சிமிக்க காலப்பகுதிகளில் வழமையாக ஏற்படும் சோதனைகளும், வேதனைகளும், இடையூறுகளும், வசைபாடல்கள், கேள்விகேட்டல் என்பன இந்த ஆண்டும் இல்லாமல் இல்லை. ஆனால், இவர்களின் வன்மம் கொண்ட இச்செயற்பாடுகளை நாம் புறந்தள்ளாமல் இக்காலப்பகுதியில் அவற்றை எமக்கு பலம் சேர்க்கும் விடயமாகவே பார்க்கின்றோம்.
இக்காலப்பகுதியில் எம்தேசத்தில் எமது மக்கள் உயிரை பணயம்வைத்து உனது, எனது ஏன்? எதற்கு? என்று பாராது ஒன்றுக்கு ஒன்று உதவியாகப் பயணித்தனர். அதே போன்று புலம் பெயர் தேசங்களில் பிரான்சிலும் நாமும் இரவு பகலாக கத்திக்கதறி எமது மக்களைக் காப்பாற்றுமாறு வேண்டினோம்; சனநாயகப் போராட்டங்களை முன்னெடுத்தோம். 14 ஆண்டுகளாகியும் இன்றுவரை தொடர்கின்றோம். நீதி கிடைக்கும் வரை அது தொடரும். அதுவரை தமிழீழ தேசத்தவர்கள் நாங்கள் ஒவ்வொரு வழிகளிலும் நியாயத்திற்காகவும், தர்மத்திற்காகவும், உண்மைக்காகவும் ஆன்மீக ரீதியாகவோ, கல்வி கலை, கலாசாரம், பல்லின மக்கள் கட்டமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பயணிப்பதில் எமக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. விலகிநின்று பயணிக்கும் காலமல்ல. ஆனால், அவை முற்கூட்டியே திட்டமிட்ட நிகழ்சி நிரலில் பயணித்திருக்க வேண்டும். அதுவே இதுவரை நாம் கட்டிக்காத்த நிழல் அரசின் கண்ணியமுமாகும். அதனைக் கடைப்பிடிப்போம். இது ஒட்டு மொத்தமான மக்களுக்கானது. அதன் பயணமும், முடிவும் அனைத்து மக்களின் கைகளில்தான் இருக்கின்றது.
நன்றி!
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here