சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்குள் ஒரு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் ரோகண புஸ்பகுமார ஆகியோர் ஊடாக அறிவித்துள்ளதையடுத்து, தமிழ் அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக எழுத்து மூலமாகத் தெரிவித்துள்ளனர்.
அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கமைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் நவம்பர் 8ஆம் திகதி முதல் முழு அளவில் தமது உண்ணாவிரதப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அவ்வாறான ஒரு போராட்டத்துக்கு நீதி அமைச்சர்,மகளிர் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் ஊடாக மைத்திரிக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் முழு விவரம் வருமாறு:
இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கு,
கடந்த 12.10.2015 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 6 நாள்களாகத் தொடர்ந்த அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் நீதியானதும் நியாயமானதுமான தன்மையினை உணர்ந்து கௌரவ ஜனாதிபதி அவர்களால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தின் ஊடாக எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில், எமக்கான பொருத்தமான தீர்வினை 2015 நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்குள் தருவதாக அறிவித்துள்ளார்.
இக்கோரிக்கையை ஏற்று எமது போராட்டத்தை, மேற்குறித்த திகதிவரை இடைநிறுத்திக் கொள்கின்றோம். இக்காலப்பகுதிக்குள் தங்களால் வழங்கப்பட்ட உறுதிமொழியின்படி, கைதிகளான எமக்கு பொருத்தமான ஒரு தீர்வு கிடைக்காத பட்சத்தில் மீண்டும் எமது விடுதலைக்கான ஒரு முழுமையான உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பிப்போம் என்பதைத் தங்களிடம் மிக வேதனையுடன் அறியத் தருகின்றோம்.
அத்துடன் நவம்பர் 7ஆம் திகதிக்குப் பின் தொடரும் எமது போராட்டத்துக்குப் பின்வருவோர் கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்ஷ, சிறுவர் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தொடர்பாடல் அமைச்சர் மனோ கணேசன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் கௌரவ ரோகண புஸ்பகுமார, சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த சுகத கம்லத் ஆகியோர் இவ்வாறு கடமைப்பட்டுள்ளார்கள் என்றுள்ளது.