நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நிகழ்ந்தது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை விசாரிக்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004-ம் ஆண்டு ஏற்பட்டபோது மன்மோகன் சிங் தம்வசம் நிலக்கரி சுரங்கத் துறையை வைத்திருந்தார்.
சுமார் 5 ஆண்டுகள் நிலக்கரி அமைச்சகப் பணிகளை அவர் கவனித்து வந்தார். அப்போது ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இப்படி நிலக்கரி சுரங்கங்களை தனியார்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இதுபற்றி ஆய்வு செய்த மத்திய கணக்குத் தணிக்கைத் துறையினர் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழலால் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக கடந்த 2012-ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்த முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் பி.சி.பரக் இந்த வழக்கில் முதல் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில் முடிவு எடுத்த காரணத்துக்காக நான் சதி செய்ததாக குற்றம் சாட்டினால், அதில் மன்மோகன்சிங்குக்கும் பங்கு உண்டு என்றார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம், இந்த முறைகேடு குறித்து நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி., பரக் மற்றும் தொழிலதிபர் குமார்மங்களம் பிர்லா ஆகியோரிடம் மறுவிசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் நிலக்கரித்துறை அமைச்சரின் விளக்கத்தையும் (முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்) சி.பி.ஐ., பதிவு செய்ய வேண்டும் என்று இன்று உத்தரவிட்டது.
அத்துடன் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 27-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.