அடிமைப்பட்டு அடங்கிப்போகும் இனமல்ல நாம், எமக்கான தனித்துவத்துடன் வாழ தமிழீழ தேசம் அமைப்பது ஒன்றே தீர்வாகும் என்ற இலட்சியத்தில் இறுதி மூச்சுவரை உறுதியுடன் இருந்து வந்தவர்தான் முதுபெரும் போராளியான ‘தேசபிமானி’ டேவிட் ஐயா அவர்கள்.
கட்டட நிர்மாணத்துறையில் வரைகலை நிபுணராக உலகம் முழுதும் ஆளுமை செலுத்திவந்த ‘தேசபிமானி’ டேவிட் ஐயாவின் திறமைகளை கென்யாவின் மும்பாஸா நகரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் இன்றும் கம்பீரமாக வெளிப்படுத்தி நிற்கின்றன. உலகெங்கும் நகரங்களை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுவந்த போதிலும் தாய்நாட்டின் ஒவ்வோர் நிகழ்வுகளை அவதாணித்தவராகவே வலம்வந்தார்.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொடுமைக்குள்ளாகி தமிழர்கள் நிம்மதியிழந்து அலைந்து திரிந்த நிலைகண்டு வேதனைப்பட்டதோடு இருந்துவிடாது அந்நிலையினை மாற்றும் நோக்கில் அரசியல் பிரவேசம் மேற்கொண்டார். தமிழர்கள் தமது தனித்தன்மையை நிலைநிறுத்துவதற்கு தமிழீழ தேசம் அமைப்பது ஒன்றே தீர்வாகும் என்பதை உணர்ந்து மக்களை அதற்கு தயார்படுத்தும் பணியில் அயராது ஈடுபட்டுவந்தார். அதற்காகவே வெலிக்கடை சிறைவாழ்வை சிங்கள அரசு பரிசளித்திருந்தது.
தமிழர் தந்தை செல்வநாயகம் தலைமையில் 1947 ஆம் ஆண்டு மேற்கொண்ட சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிங்கள காவல்துறையினர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதல் முதற்கொண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் 1983 சூலையில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை வரையான தமிழின அழிப்பு நடவடிக்கைகளின் நேரடி சாட்சியாக நம்மிடையே வாழ்ந்துவந்த ‘தேசபிமானி’ டேவிட் ஐயா அவர்கள் கடந்த 11ஆம் திகதி இறைவனடியெய்தியுள்ளார்.
தான் கற்றுத்தேர்ந்த நகர நிர்மாணத்திறன் மூலம் தமிழீழ தேசத்தை கட்டமைக்க வேண்டுமென பெருவிருப்போடு வாழ்ந்து வந்தார். அதன் வெளிப்பாடாக தமிழீழத்தின் பல நகரங்களை மீள்நிர்மாணிக்கும் வகையில் வரைபடங்களையும் உருவாக்கியிருந்தார். தனது சிந்தையில் தமிழீழத் திருநாட்டை நிர்மாணித்து அழகுபார்த்துவந்த சிறந்த ‘தேசபிமானி’யை நாம் இழந்து நிற்கின்றோம்.
1983 ஆம் ஆண்டு இறுதிக்காலம் முதல் கடந்த சூன் மாதம் வரை தமிழகத்தில் வாழ்ந்து வந்த ‘தேசபிமானி’ டேவிட் ஐயா, நான் நிச்சயம் இலங்கைக்குச் செல்ல மாட்டன். அது என் மக்களைக் கொன்றொழித்த பூமி. ஒடுக்கப்பட்டு வாழ்விழந்த மக்களின் நிலையை இந்த வயதில் என்னால் தாங்க இயலாது என்று கூறிவந்த நிலையில் அவர் தன் வாழ்வின் இறுதி நாட்களை தாய்மண்ணில் வாழக்கிடைத்தமை பெரும்பேறாகும்.
தமிழீழம் நோக்கிய பயணத்தில் விதையாகும் ஒவ்வொருவரது இழப்புகளும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாக இருந்தாலும் அவர்களது கனவுகள் எம்மை மென்மேலும் உறுதிமிக்கவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழீழக் கனவு சுமந்து இறுதி மூச்சுவரை உறுதியோடு வாழ்ந்து மாமனிதருக்கு ஒப்பாக மறைந்த ‘தேசபிமானி’ டேவிட் ஐயா அவர்களது கனவுகளையும் எம் நெஞ்சில் சுமந்து நனவாக்குவோம் என உறுதியேற்போம்.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.