பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான Goussainville பகுதியில் குசான்வில் பிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 24 ஆவது அகவை நிறைவுவிழா கடந்த (23.04.2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 16.00 மணியளவில் இடம்பெற்றது.
மங்கலவிளக்கேற்றப்பட்டு, அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதம் இசைக்கப்பட்டது.
மங்கல விளக்கினை குசான்வீல் நகர தந்தை திரு.அப்டெல்அசிஸ் அமிதா(Abdelaziz HAMIDA)
உதவி நகர தந்தை திருவாட்டி நெஸ்ரின் அஜ்ஜே (Nesrine HAJEJE)
நகரசபை உறுப்பினர் ஜோன் மார்க் லூசோ(JEAN MARC LUSSOT)
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக பொறுப்பாளர் திரு.நாகஜோதீஸ்வரன் ,
குசான்வீல் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.காணிக்கைநாதன்,
செயலாளர் திரு.காந்தன்,
மற்றும் குசான்வீல் தமிழ்ச்சோல தமிழாசிரியர்கள் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து வரவேற்புரையையும் தலைமையுரையையும் குசான்வில் பிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.காணிக்கைநாதன் அவர்கள் ஆற்றியிருந்தார். பிரதம விருந்தினர் உரையைத் தொடர்ந்து குசான்வில் தமிழ்ச்சோலை ஆசிரியர்கள் பிரதம விருந்தினரால் மதிப்பளிக்கப்பட்டனர். குசான்வில் தமிழ்ச்சோலை மாணவ மாணவிகளின் அரங்க நிகழ்வுகள் மற்றும் Association Franco-Turc, Association des DOM-TOM. ஆகிய பிற இனத்தவர்களின் கலாச்சார நடனங்கள் சிறப்பாக இடம்பெற்றன.
நடனங்கள், எழுச்சிநடனங்கள், பாடல்கள், கவிதைகள், பேச்சுக்கள், நாடகங்கள், வில்லுப்பாட்டு என அனைத்தும் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் தமிழ்ச்சோலை மாணவர்களால் மிகவும் சிறப்பாக ஆற்றுகைப்படுத்தப்பட்டிருந்தன. நிகழ்வில், வழமைபோன்று தமிழ்மொழித் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பாடசாலையில் நடாத்தப்பட்ட ஆங்கிலத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள், திருக்குறள் திறன்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள், தமிழ்க்கலைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் விருந்தினர்களால் வெற்றிக்கிண்ணம், பதக்கம், சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
தொடர்ந்து நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி உரைக்கப்பட்டது. அனைத்து மாணவ மாணவியர்களும் இணைந்து தமிழ்மொழி வாழ்த்து இசைத்ததைத் தொடர்ந்து நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-ஊடகப்பிரிவு )
(படங்கள்: வினுயன்)