நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீது இனந்தெரியாதோர் நடத்திய வாள்வெட்டில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டின் உரிமையாளர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என்று ஆறுபேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று சனிக்கிழமை (22) அதிகாலை இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்குப் பயணம் செய்யவுள்ளனரென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நெடுந்தீவு பகுதியில் இன்று (22) அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், ஒரு பெண் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரிய வருகின்றது.