தேசத்திற்கு அரும்பணி ஆற்றிய கலைஞர் நாவண்ணன் – தமிழீழத் தேசியத் தலைவர்.!

0
68

ஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள். 

ஈழத்தின் மூத்த கவிஞர் நாவண்ணன் 15.04.2006 அன்று மரணமடைந்தார் 

தலைமைச்செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

சுயநலன்கருதாது, நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் எமது தேச சுதந்திரப்போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிய கலைஞர் நாவண்ணன் அவர்களை நாம் இழந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. தமிழினம் பெருமைப்படும்படியாக கலையுலகில் பெரும் சாதனைகளைப் புரிந்த இந்தக்

கலைமாமணியை அவரது முதலாவது நினைவாண்டில் இன்று நாம் பெருமையோடு நினைவுகூருகிறோம். இவர் ஒரு சிறந்த கலைப்படைப்பாளி, இவரிடம் கலைஞர்களுக்கே உரித்தான உள்ளம் இருந்தது.

வற்றாத கலையுணர்வு இருந்தது. கட்டுக்கடங்காத கற்பனை வளம் இருந்தது. கலைக்கு அணிசெய்கின்ற நிறைந்த அறிவு இருந்தது. தமிழ் மீது அளவுகடந்த பற்றும் பாசமும் இருந்தது. தனது தாய் மண்ணின் விடுதலைக்கு பங்காற்ற வேண்டும் என்ற உயரிய குறிக்கோள் இருந்தது. சுயமான ஆளுமை இருந்தது. இவை எல்லாம் ஒன்று கலந்த மனிதம் இருந்தது. இந்த அழகான மனித மாண்பே அனை வரையும் அவரை நோக்கிக் கவர்ந்து கொண்டது. சுதந்திரப்போராட்டங்களுக்கு உந்துசக்தியாக ஊக்க சக்தியாக அமைவது தேசப்பற்று. இந்தத் தேசப்பற்று இவரிடம் நிறைந்திருந்தது. அவரது ஆழ்மனதில் ஆழமாக வேரோடிநின்றது. அவரை ஆட்கொண்டுநின்றது. விடுதலை வேட்கையாக அவரிடம் வெளிப்பட்டு நின்றது.எமது சுதந்திர இயக்கம் முன்னெடுத்துவரும் விடுதலைப் போராட்டத்திலே ஒரு இலட்சியப் பிடியை அவரிடம் ஏற்படுத்திவிட்டது.

பொதுவாகவே இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டுவிட்டால், துன்பங்கள் தெரிவதில்லை. வலிகள் புரிவதில்லை. அவரும் போராட்ட வாழ்வின் பெரும் துயர்களையும் சுமைகளையும் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, முதுமையான வாழ்வின் உடல் உபாதைகளையும் சகித்துக்கொண்டு விடுதலைப் பாதையிலே விடாப் பிடியாகச் செயற்பட்டார்.

அவர் தமிழீழ மண் தந்த ஒரு சிறந்த கவிஞர், சிறந்த ஓவியர், சிறந்த சிற்பவல்லுனர், சிறந்த நாடகநெறியாள்கையாளர். அவர் கலைகளுக்காகவே வாழ்ந்தார். கலைகள் பற்றியே சதா சிந்தித்தார். புதிய கலைவடிவங்களைக் கண்டறிந்து அவற்றோடு புதிய நுட்பங்களைப் புகுத்தி, காலத்திற்கேற்ப, வரலாற்று ஓட்டத்திற்குஏற்ப கலைப்படைப்புக்களைச் செய்தார்.

அவரைப் போலவே அவரது கலைப்படைப்புக்களும் அழகும் ஆழமும் வாய்ந்தவை. அனைவரையும் கவர்ந்திழுக்கும் சக்தி வாய்ந்தவை. அத்தோடு அவர் தனது கலைப் படைப்புக்கள் ஊடாக மக்களிடையே போராட்ட விழிப்புணர்வையும் ஒடுக்கு முறைக்குஎதிரான கொதிப்புணர்வையும் தூண்டிவிட்டார். சிஙக் ள அரசு எமது தாயக மண்ணில்  நிகழ்த்திய கொடுமைகளையும் கொடூரங்களையும் அதன் ஆழ அகலங்களில் காலவரிசைப்படி பதிவுசெய்தார். போராட்டவாழ்வில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் பல்வேறு

கோணங்களில் படம்பிடித்தார். தனது கலைப்படைப்பின் உச்சமாக கரும்புலிகளது தோற்றத்தையும் வளர்ச்சியையும் எழுச்சியடையும் தனது அழகுத்தமிழிலே கரும்புலிக்காவியமாக வடித்து நூலாக வெளியிட்டார். அன்னார் ஆற்றிய பெரும் பணி என்றுமே போற்றுதற்குரியது.

கலைஞர் நாவண்ணன் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக “மாமனிதர்”என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்,

தமிழீழத்  தேசியத் தலைவர் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here