பிரான்சில் இடம்பெற்ற ஏவ்றி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 27 ஆவது ஆண்டு விழா நிகழ்வு!

0
415

பிரான்சு ஏவ்றி பிராங்கோ தமிழ்ச்சங்க தமிழ்ச்சோலையின் 27 ஆவது ஆண்டுவிழா நேற்று 15.04.2023 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஈகைச் சுடரினை மாவீரர் லெப்.கேணல் செந்தோழன்(புகைப்படப் பிரிவுப் பொறுப்பாளர்) அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

மங்கல விளக்கேற்றப்பட்டு அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் ஏவ்றி தமிழ்ச் சோலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வில் ஏவ்றி துணை நகரபிதா, மாநகரசபை உறுப்பினர்கள், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்டமைப்புகளின் பிரதிநிதிகள் சிறப்புவிருந்தினர்களாகக் கலந்து கொண்டதுடன் மதிப்பளிப்பையும் செய்துவைத்திருந்தனர்.

ஏவ்றி தமிழ்ச்சோலை நிர்வாகிகள், ஆசிரியர்கள், வளர்தமிழ் 12 இனை நிறைவுசெய்த மாணவர்கள், வளர் தமிழ் 1 முதல் வளர் தமிழ் 12 வரை தமிழ் மொழி பொதுத் தேர்வில் அதிதிறன், மிகுதிறன் சித்தியடைந்த மாணவர்கள், இணைய வழிக்கல்விக் கழகத்தில் பட்டம்பெற்ற ஏவ்றி தமிழ்ச்சோலை மாணவர்கள், உள்ளிட்டோர் மதிப்பளிப்புச் செய்யப்பட்டிருந்தனர்.

அத்தோடு, ஏவ்றி தமிழ்ச்சங்கத் தலைவர், தமிழ்ச்சோலை நிர்வாகி ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கப்பட்டு மதிப்பளிப்புச் செய்துவைக்கப்பட்டனர்.

சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தன. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் சிறப்புரை ஆற்றியிருந்தார்., அவர் தனது உரையில், மாணவிகள் இருவர் இலங்கையில் உள்ள திருத்தலங்கள் பற்றிப் பேசியதைச் சுட்டிக்காட்டியிருந்த அவர், இன்று அந்தத்திருத்தலங்கள் சிறிலங்கா இனவாதிகளால் சிதைக்கப்பட்டு புத்த விகாரைகள் அமைக்கப்படுவதுடன், அதனைத்தடுக்க முடியாத நிலையிலேயே இன்றைய தமிழ் அரசியல் வாதிகள் உள்ளமையையும் அதனைத் தடுத்து நிறுத்த புலம்பெயர் மக்கள் போராட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். வரும் மே 18 தமிழின அழிப்பு நினைவேந்தலை ஒட்டி இடம்பெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், ஆரம்ப காலங்களில் ஏவ்றி தமிழ்ச்சங்கத்தினதும் ஏவ்றிவாழ் மக்களின் முன்மாதிரியான பங்களிப்புப் பற்றியும் சுட்டிக்காட்டியிருந்தார்.

நன்றியுரையினைத் தொடர்ந்து, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடனும் நிகழ்வு நிறைவு கண்டது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here