தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் ஒன்பது பேரும் தமது காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
தம்மை விடுதலை செய்ய வேண்டும் அல்லது நிபந்தனை அடிப்படையிலேனும் முகாம்களில் குடும்பத்தினரும் இணைந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் தம்மை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி வழங்கியுள்ளமை குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்ததாக ஈழ அகதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வேல்முருகன் குறிப்பிட்டதற்கு இணங்க தாம் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடத் தீர்மானித்துள்ளதாக ஈழ அகதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த முதலாம் திகதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஈழ அகதிகள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் மருந்துவமனையிலும் ஈழ அகதிகள் தமது காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் அவர்களின் விடுதலை குறித்து தமிழக முதலமைச்சர் மட்டத்தில் உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியமை மற்றும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களிலேயே ஈழ அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.