
இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரான பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார். மரணிக்கும்போது அவருக்கு 76 வயதாகும்.
ரொய்ட்டர்ஸ், பிபிசி, வீரகேசரி உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றிய இவர், இன்று அதிகாலை 12.40 மணியளவில் காலமானார்.
நாட்டின் யுத்த காலப் பகுதியில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் செய்தி சேகரித்து, அதனை ஊடகங்களில் கொண்டு சேர்ப்பதில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக நீண்ட காலமாக பிபிசியின் தமிழோசையில் இலங்கையிலிருந்து பொன்னையா மாணிக்கவாசகம் செய்திகளை வழங்கி வந்தார்.
கடந்த வருடம் (2022) டிசம்பர் மாதம் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்கங்கள், இலங்கை பத்திரிகை சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கையின் ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் நிகழ்வில் பொன்னையா மாணிக்கவாசகம் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னார் ஓய்வுபெற்ற வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நாகேஸ்வரியின் அன்புக் கணவரும், வைத்தியகலாநிதி பவித்திராவின் பாசமிகு தந்தையும், வைத்தியகலாநிதி தினேஸின் அன்பு மாமனாரும், தனேந்திராவின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நாளை (13) 7.00 மணிக்கு ஆரம்பித்து 9.00 மணிக்கு தட்சனாங்குளம் இந்து மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.