
( 31.03.2009 – 04.04.2009)
முப்பதாண்டு காலமாக நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.
பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு தமிழர் தேசத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சிறிலங்கா படைகள் மேற்கொண்டது.
வரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப் பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது.
புதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோதும் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் போராளிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.
அந்தவகையில் தான் இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக ஆனந்தபுரம் பகுதியில் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு தலைமையால் ஒழுங்குபடுத்தப்பட்டது.
தேசிய தலைவர் அவர்கள் உட்பட புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.
புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு போராளிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்டன.
புலிகளின் இறுதியிலும் இறுதி தரையிறக்கமாகவும் ஆனந்தபுரம் சமர் இருந்தது. இந்த சண்டையின் முடிவில் பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியை கைப்பற்றி மக்களை மீள அந்த இடங்களில் குடியிருத்த வேண்டும் என்பதே தலைமையால் திட்டமிடப்பட்டு தளபதிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.
சுமார் 600 வரையான போராளிகள் இந்த சண்டையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பெரும் உலக வல்லரசுகளின் உதவிகளால் அதிகரித்திருந்த இராணுவ பலத்தோடு மோதவேண்டும் என்பதால் பெரிய ஆளணி ஒன்றை தரையிறக்க புலிகளும் தயார்ப்பாடுத்தினார்கள்.
தலைவர் தளபதிகள் உட்பட அனைத்து ஆயுத ஆளணிகளும் இந்த சண்டைக்காக தயாராகியிருந்த நிலையில் புலிகள் தமது தாக்குதலை ஆரம்பிக்க முன்னரே இராணுவம் புலிகளின் வினியோக பாதையை முடக்கி தாக்குதலை ஆரம்பித்திருந்தது.
அதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து பெட்டி அடித்து நிலைகொண்டிருந்த புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.
கரிய புலிகளின் தீரம் மிகுந்த தாக்குதலின் மூலம் “புதுக்குடியிருப்பு மண்ணைவிட்டு பின்வாங்கி வரமாட்டேன்” என்று பிடிவாதமாக நின்ற தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய தளபதிகள் இராணுவத்தின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.
பாரிய யுத்த களங்களில் பல்லாயிரம் போராளிகளை வழிநடாத்தி சண்டையை வெற்றி பெறச் செய்யும் வீரத்தளபதிகள் தனித்து நின்று போரிட்டுக் கொண்டிருந்தனர்.
தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளை வீசி அந்த இடம் முழுவதையும் நெருப்பு வலயமாக மாற்றி எங்கும் புகை மண்டலம் சூழ்ந்திருக்கும் வேளைகளில் பல்குழல் எறிகணைகள், விமானத்தாக்குதல்கள் என்று சல்லடை போட்டு போராளிகளை அழித்தது இராணுவம்.
வீரச்சாவடைந்தவர்களையோ காயப்பட்டவர்களையோ தூக்க நேரமில்லை. தூக்க ஆளுமில்லை.
காயமடைந்த போராளிகளுக்கு மருந்தில்லை. அவர்கள் தங்களை சுட்டுவிட்டு தப்பி பின்னுக்கு செல்லுங்கள் என்று கதறிக்கொண்டிருந்தார்கள்.
வாழ்வா சாவா என்ற நிலையில் புலிகள் செய்த இறுதிப் பாரிய படை நடவடிக்கை மிகப்பெரிய ஆயுத ஆளணி இழப்புடன் தோல்வியில் முடிந்தது.
இத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா என விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட சுமார் நானூறு வரையான போராளிகள் வீரகாவியமானார்கள்.
.