பிரான்சில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மரதன் ஓட்டத்தில் ஈழத்தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பெண்!

0
248


கடந்த 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு பாரிசு நகரில் நடைபெற்ற சூழல் மாசடைதல், பிளாஸ்ரிக் பாவனையால் ஏற்படும் தீமைகள், நாகரிகப் போர்வையில் அநியாயமாக கழிவுகளுக்குள் உள்ளாகும் உடைகள் மூன்றாம் உலகநாடுகளின் பாவனைக்கு வழங்குதல், உயிர்கள் மீதான பாதுகாப்பு என பல்வேறு மனிதகுலத்திற்கு அவசியமான விடயங்களை கருத்தில் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மரதன் ஓட்ட நிகழ்வில் 15 ஆயிரம் வரையிலான பிரெஞ்சு மற்றும் பல்லின மக்கள் பங்கு பற்றியிருந்தனர்.; ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதியாக இரண்டு பிள்ளைகளின் தாயார் திருமதி. பிரவீனா நிமால் ( இலக்கம் 14970 )அவர்கள் பங்கு பற்றியதுடன் 10 கிலோமீற்றர் தூரத்தை முழுமையாக ஓடித் தமிழினத்திற்கு பெருமை சேர்த்திருந்தார்.

இவரின் மனத்திடம் கொண்ட ஓட்டத்தினால் சிறப்பாக பேற்றினைப் பெற்றுக்கொண்டதோடு அதற்கான சிறப்புப் பரிசினையும் பதக்கத்தையும் ஏற்பாட்டாளர்களிடம் பெற்றுக்கொண்டார். பாரிசின் மத்தியில் ஆரம்பித்த இந்த மரதன் ஓட்டம் பாரிசின் சர்வதேச உதைபந்தாட்ட மைதானத்தில் நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு செயற்பாட்டில் முதற்தடவையாக திருமதி. பிரவீணா ஈடுபட்டதும் தனது திடமான உறுதியான செயற்பாட்டை இறுதிவரை செய்து முடித்தது உடல் ரீதியாக களைப்பைக் கண்டிருந்தாலும் மனதாலும், தனது நோக்கத்திலும், விருப்பத்திலும் உறுதியாக இருந்ததை அவரின் பேச்சில் காணக்கூடியதாக இருந்தது. நிகழ்வின் முடிவில் இவருடன் பேசியபோது தனது நீண்டகால விருப்பம் நிறைவேறியதும், இதற்கு பெரும் உந்து சக்தியாக இருந்த பெற்றோர், மற்றும் துணைவருக்கும் நன்றியைத் தெரிவித்ததோடு பெண்களால் எதனையும் சாதிக்க முடியும், பெண் என்பவள் வீட்டுக்குள் முடங்கி குடும்பம், சுற்றம் என்பதைக் கடந்து இவ்வாறான மனிதநேயப் பணிகளில் ஈடுபட வேண்டும். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் சாதிக்க வேண்டும் என்பதன் ஓர் உதாரணமாகத் தான் இன்று நின்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.

முதற்தடவையாகவே தான் இதில் துணிவுடனும், மனத்திடமாகவும் பங்கு பற்றியுள்ளேன் இனிவரும் காலங்களில் இங்கு வாழும் தமிழ்ப் பெண்கள், இளையவர்கள் பங்கெடுத்து ஈழத்தமிழ் பெண்களுக்கு பெருமை சேர்க்க முன்வரவேண்டும். வருவார்கள் என்ற நம்பிக்கை கொள்கின்றேன் என்றார். பாரிசு தேசத்தில் படித்து அதற்கேற்ற நல்லதொரு உத்தியோகப் பணியை இவர் ஆற்றிவந்தாலும் பணியிடத்திலும் இவர் மனிதநேயமிக்க நல்லதொரு பெண்ணாக மற்றவர்களால் மதிப்புடன் பார்க்கப்படும் திருமதி பிரவீணா தற்பொழுது அதற்கு ஒருபடி மேலே சென்று இந்தப் பணியை செய்திருப்பதானது பிரான்சில் வாழும் ஈழத்தமிழ் மக்களுக்கும், பெண்களுக்கும், நல்லதொரு பெயரையும் பெருமையையும் தேடித்தந்திருக்கின்றது.

இவரை பல அரசு மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்கள் பிரமுகர்கள் வாழ்த்தியிருந்தனர். இவர்களுடன் ஈழத்தமிழ் மக்கள் நாமும் வாழ்த்தி நிற்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here