மடு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மழுவராஜன் கட்டை அடம்பனில் 10 ஏக்கர் கொண்ட அரச காணியை அடாத்தாகக் கைப்பற்றி அங்கு குடியிருந்த 2 குடும்பங்களையும் மன்னார் நீதிமன்று வெளியாத்து நடவடிக்கை மூலமாக வெளியேற்றியுள்ளது.
மன்னார் மாவட்ட நீதிமன்றில் நீதிபதி ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.குறித்த காணியில் 2 குடும்பங்களும் 2008 ஆம் ஆண்டிலிருந்து குடியிருக்கின்றன. அதனுள் குடியிக்க வேண்டாம் என்று பிரதேச செயலர் அறிவுறுத்தியும் அந்த அறிவுறுத்தலை அந்தக் குடும்பத்தினர் பின்பற்றியிருக்கவில்லை. அதனால் அவர்களுக்கு எதிராக மன்னார் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இது தொடர்பில், விசாரணையின் பின்னர் அரசினால் வழங்கப்பட்ட எழுத்துமூல அதிகாரத்தின்படி அந்தக் குடும்பங்கள் குறித்த காணியை ஆட்சி செய்வதாக உறுதிப்படுத்தத் தவறிவிட்டனர். அதனால் அந்தக் காணியிலிருந்து வெளியேறுமாறு கடந்த தவணை நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அந்தக் குடும்பத்தினர் நீதி மன்றக் கட்டளையைப் பின்பற்றாது தொடர்ந்தும் அதே காணியில் தங்கி இருந்துள்ளனர். இது தொடர்பில், மடு பிரதேச செயலர், மன்னார் மாவட்ட நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். இதனையடுத்து நீதிபதி அலெக்ஸ் ராஜா கடந்த முதலாம் திகதி வெளியாத்து உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.அதனையடுத்து மன்னார் நீதிமன் றப் பதிவாளர், அலுவலர்கள் மூலமாக வெளியாத்து நடவடிக்கை நிறை வேற்றப்பட்டு காணி மடு பிரதேச செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது.