கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் முறையான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை விடுவிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இந்த பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டிருந்தால் சர்வதேசத்தின் அழுத்தமும் தொடர்ந்துகொண்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினைகள் கடந்த காலத்தில் இருந்து தொடர்ந்து வருகின்ற நிலையில் அது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
யுத்த காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த பாதுகாப்பு செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழான செயற்பாடுகள் பலமடைந்து காணப்பட்டன. அவ்வாறான கட்டத்தில் பாதுகாப்பு செயற்பாடுகளை எம்மால் விமர்சிக்கவோ அல்லது தடுக்கவோ அதிகாரம் இருக்கவில்லை. ஏனெனில் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. அதேபோல் யுத்தம் முடிவடைந்து ஒருசில ஆண்டுகளே கடந்திருந்ததனால் நாட்டில் பதற்ற நிலைமைகள் தொடர்ந்தன. ஆகவே அக்கால கட்டத்திலும் அதற்கு முன்னரான யுத்த காலகட்டத்திலும் கைதுசெய்யப்பட்ட கைதிகள் தொடர்பில் அரசாங்கம் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.
அதேபோல் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பிலும் முறையான விசாரணைகளை மேற்கொண்டு இப்போது எழுந்திருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகான வேண்டும். இல்லையேல் தொடர்ந்தும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முரண்பாடுகளும் எதிர்ப்புகளும் எழுந்துகொண்டே இருக்கும். சர்வதேசமும் ஏதாவது ஒரு வழியில் இலங்கைக்கு எதிர்ப்புகளை வழங்கிக்கொண்டே இருக்கும்.
அதேபோல் புலம்பெயர் இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு வரவழைப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். இலங்கையின் பிரஜைகள் இந்த மண்ணில் அமைதியாக வாழவே விரும்புகின்றனர். எனினும் நாட்டில் கடந்த காலத்தில் இடம்பெற்ற அச்சுறுத்தலான சூழலின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய மக்கள் இன்று சர்வதேச நாடுகளில் ஒவ்வொரு அமைப்புகளின் ஊடாக இங்கு வருவது தொடர்பில் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆகவே இவை அனைத்தையும் அரசாங்கம் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.
எமது ஆட்சியில் இறுதிக் காலகட்டத்தில் இந்த விடயங்களை தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஆனால் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் அனைத்தையும் தீவிரப்படுத்தவில்லை. அதற்கு அரசாங்கம் எதிர்கொண்ட ஏனைய சவால்களும் காரணமாகும். எனினும் இப்போது நிலைமைகள் அவ்வாறு அல்ல. நாடு அமைதியான சூழலில் உள்ளது. அதேபோல் அரசியல் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடும் ஏற்பட்டுள்ளன. ஆகவே இப்போது இணக்கப்பாட்டு அடிப்படையில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். குற்றவாளிகள் அல்லாத அதேவேளை சந்தேகத்தி பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றார்.
Home
சிறப்பு செய்திகள் தடுப்புக்காவல் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை வேண்டும்: வாசுதேவ நாணயக்கார!