தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 12 ஆவது ஆண்டாக வன்னிமயில் – 2023 தேச விடுதலைப் பாடல்களுக்கான நடனப் போட்டி முதல் நாள் நிகழ்வுகள் கடந்த 25 ஆம் (சனி), 26 ஆம் (ஞாயிறு), மற்றும் 27 ஆம் (திங்கள்) நாள்களில் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான புளோமெனில் பகுதியில் மிகவும் சிறப்பெழுச்சியாக இடம்பெற்று முடிந்த நிலையில் நேற்று (04.03.2023) சனிக்கிழமை நான்காம் நாள் இறுதிப் போட்டிகள் ஒள்னே சுபுவா பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற நிலையில் இறுதிப்போட்டிகள் இன்று (05.03.2023) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்று முடிந்தன.
இன்று ஆரம்ப நிகழ்வாக மாவீரர் திரு உருவப்படத்திற்கு 15.01.1997 அன்று பழம்பாசி நெடுங்கேணிப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த கப்டன் குமணன் அவர்களின் பெற்றோர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர். அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து இறுதிப்போட்டிகள் சிறப்பாக விறுவிறுப்போடு இடம்பெற்றிருந்தன.
சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.
மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுக்கு மத்தியில் 2023 இன் வன்னிமயிலாக னகவின்கலையக மாணவி செல்வி லஜீந்திரன் சௌமியா அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
பலரது கரகோசத்திற்கு மத்தியிலும் உணர்வு பொங்க அவர் மேடையில் வன்னி மயிலாகத் தனது மகுடத்தை சூடிக்கொண்ட காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
கேணல் பரிதி அவர்களின் தாயார் வன்னிமயிலுக்கு கேணல் பரிதி அவர்களின் திரு உருவப்படம் பொறிக்கப்பட்ட பதக்கத்தை அணிவித்து அவரை வாழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .
போட்டியின் நடுவர்களும் மேடையில் மதிப்பளிப்புச்ஸசெய்யப்பட்டதுடன், அவர்களின் சார்பிலான கருத்துக்களும் பகிரப்பட்டன.
அனைத்துப் பிரிவுகளிலும் வெற்றியீட்டிய போட்டியாளர்கள் பரிசில்களும் பதக்கமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பின் முன்னாள் பொறுப்பாளர் திருமதி சுகந்தினி சுபாஸ்கரன் அவர்களும் மேடையில் மதிப்பளிப்புச் செய்யப்பட்டார்.
நிறைவாக தமிழ் பெண்கள் அமைப்பின் சார்பாக அனைவருக்கும் நன்றி உரைக்கப்பட்டது.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் தாரக மந்திரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுகண்டது.
நிகழ்வுகளின் சில முக்கிய பதிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களும் முடிவுகளும் பின்னர் வெளியிடப்படும்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)
(படங்கள்: யூட், வினுயன், பகீரதன்)