பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள பாடசாலையொன்றின் மீது தலிபான்கள் இன்று நடத்திய தாக்குதலே பாகிஸ்தானில் தலிபான்கள் இதுவரை நடத்திய மிகவும் கொடூரமானத் தாக்குதலாக பதிவாகியுள்ளது.
இன்றையத் தாக்குதலில் 141 பலியாகியுள்ளனர். இவர்களில் 132 பேர் பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இன்றைய தாக்குதலில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான பாடசாலையில் பதுங்கியிருந்த தலிபான்களுடன் இடம்பெற்ற மோதல் சுமார் 12 மணித்தியாலங்களுக்குப் பின்னர் முழுமையாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது. எனினும் தொடர்ந்தும் தேடுதல்கள் இடம்பெற்று வருவதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவரும் நிலையில், தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று அறியாத ஏராளமான பெற்றோர்கள் வைத்தியசாலைளுக்கு படையெடுத்துள்ளனர்.
இராணுவ செயற்பாடுகள் குறித்த பாடசாலையில் இடம்பெற்றதன் காரணமாகவே அந்த பாடசாலைமீது தாக்குதல் நடத்தியதாக தலிபான் பேச்சாளர் பீ.பீ.சி யின் உருது மொழி சேவைக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளார்.
வடக்கு வசிரிஸ்தான் மற்றும் அதனை அண்டிய கைபார் பிராந்தியம் ஆகிய பகுதிகள் மீது பாகிஸ்தான் இராணுவம் நடத்திவரும் தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தலிபான்கள் பலியானதற்கு பலிதீர்க்கும் நடவடிக்கையாகவே இன்றைய தினம் இந்தத் தாக்குதலை அவர்கள் நடத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இன்றைய தாக்குதலில் ஈடுபட்ட தலிபான் போராளிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஒரு தகவலும், ஆறு பேர் என மற்றுமொரு தகவலும் கூறுகின்றது. எவ்வாறாயினும் இன்றைய தாக்குதலில் ஈடுபட்ட தலிபான் ஆயுததாரிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டதாக பாகிஸ்தான் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் முன்னதாக இன்றையத் தாக்குதலில் 89 மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இறுதியில் இந்த எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளதுடன், இவர்களில் 132 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை 114 பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.