ஆதி காலத்தில் செய்தி பரிமாற்றம் புகை எழுப்புதல், கூக்குரல் ஒலி, அம்பு மூலம் புறா, அஞ்சல் ஓட்டம் (அடர்ந்த காடுகள்) ஊடாக இடம்பெற்றது. நாளடைவில் அஞ்சல், குதிரை வண்டி, றோயல் வான் (Royal van) புகையிரதம், பேருந்து, விமானம், கப்பல் ஊடாக நடைபெற்று வந்தது. இன்று குறும் செய்தி (SMS), மின்னஞ்சல் (Email), தொலைநகல் (Fax) என வளர்ச்சி பெற்றுள்ளதை அவதானிக்க முடியும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கடிதத் தொடர்பு ஐரோப்பிய நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. படிப்படியாக ஏனைய நாடுகளும் கடிதத் தொடர்புகளை ஆரம்பித்த போது அஞ்சல் கட்டணம் அறவிடுவதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன.
அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அமெரிக்க அஞ்சல் மாஅதிபதி 1863 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் 15 நாடுகள் இணைத்து ஒரு கட்டமைப்பை ஸ்தாபித்தார். மீண்டும் (1878.10.09) இல் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் (UPU) என்று மாற்றி அமைக்கப்பட்டது. அந்த தினம் இன்று உலக நாடுகளில் ஒக்டோபர் 9 ஆம் திகதி உலக அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது. தற்போது 194 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 1877 இல் இலங்கை அங்கத்துவம் பெற்றது. சுதந்திர நாடு என்ற வகையில் இலங்கை (1949.07.13) மீண்டும் அங்கத்துவம் பெற்றது.
இலங்கையில் கிழக்கிந்திய கம்பனிகளால் கரையோர மார்க்கமாக அஞ்சல் சேவை ஆரம்பிக்கப்பட்டன. 1812 இல் மக்கள் செறிந்து வாழ்ந்த திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு, காலி, மாத்தறை ஆகிய இடங்களில் தபால் அலுவலகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1921 இல் ஆனமடுவ, திவுலபிட்டிய, கிரியெல்ல, அக்மீமன, மூதூர், சிலாவத்துறை ஆகிய இடங்களில் உப தபாலகங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இலங்கையில் 1832 இல் குதிரை வண்டி, 1805 இல் புகையிரதம், 1928 இல் ஆகாய விமானம், 1958 இல் பேருந்து மூலம் தபால்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன.
கொழும்பு மத்திய தபால் தரம் பிரிக்கும் நிலையம் (CME) மையப்படுத்தி இரவு வேளைகளில் நாட்டின் பல பாகங்களிற்கு தபால் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதோடு அங்கு இருந்து எடுத்தும் வரப்படுகின்றன.
முதல் நாள் அஞ்சல் இடப்படும் அஞ்சல், தபாலகம், உப தபாலகங்களில் உள்ள தபால் சேவகர் மூலம் அடுத்த நாள் துவிச்சக்கரவண்டி, நடை மூலமாக விநியோகம் செய்யப்படுகிறது. தபால் சேவகர்கள் மழை, வெயில் பாராது காடு, மேடு, பள்ளம் ஆகிய பகுதிகளுக்கு சென்று அஞ்சல் விநியோகம் செய்பவர்கள். பிரதான நகரம், மலை நாடு போன்ற இடங்களில் (Foot Post Man) நடை மூலம் இன்னும் அஞ்சல் சேவை நடைபெற்று வருகிறது. சில பகுதிகளிற்கு தோணி, சிறிய கப்பல் ஆகியவற்றின் ஊடாக சென்று அஞ்சல் விநியோகம் நடைபெறுகிறது.
தபால் சேவகர்களை தபால் மாமா, தபால் மாத்தையா, பியோன் போன்ற வார்த்தைகளில் மக்கள் அழைக்கின்றனர்.
எமது நாட்டின் சகல அரச நிறுவனங்கள், கூட்டுத் தாபனங்கள் காலையில் அஞ்சல்களை எதிர்பார்த்து வேலைகளை ஆரம்பிக்கின்றனர். அதேபோல் வேலை முடிவடையும் நேரத்தில் தமது அன்றைய அஞ்சல்களை அனுப்புகின்றனர்.
காலையில் பெரும்பாலும் சீருடை அணிந்த தபால் சேவகர்களின் மணி ஓசையை எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். தபால் சேவகர்களின் சேவை இன்றி எந்த ஒரு தபாலகமும் இயங்க முடியாது. தபால் சேவகர்கள் அஞ்சல் விநியோகத்துடன் மின்சாரம், தொலைபேசி பட்டியல், பண அளவீடு, காப்புறுதி பணம் அறவீடு போன்ற நடவடிக்கைகளை மக்களின் காலடியில் நிறைவேற்றி வைக்கின்றனர்.
இலத்திரனியல் வளர்ச்சியில் குறும்செய்தி (SMS), மின்னஞ்சல் (Email), தொலைநகல் (Fax) வளர்ச்சி பெற்றாலும் மூலப்பிரதிகள் (Original) காசோலைகள், கோவைகள், கடவுச்சீட்டு, ஆள் அடையாள அட்டை, பரீட்சை முடிவுகள், அந்தரங்க செய்திகள் ஆகியவற்றை பரிமாற்றம் செய்வதற்கு மூடிய தபால்களிற்கு மாற்றீடு இவ்வுலகில் இல்லை.
அஞ்சல் பொருட்களை விநியோகத்தில் பெரும் பங்கு ஆற்றி வரும் தபால் சேவகர்களை இன்றைய 141 ஆவது உலக அஞ்சல் தினத்தில் கௌரவிப்போம். எமது நாட்டில் 200 ஆண்டுகள் கடந்து அஞ்சல் சேவை நடைபெற்றுவருகிறது.