மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் படகு ஒன்று ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்கள் நேற்றைய தினம் (12) உயிரிழந்துள்ளனர்.
தரம் 11 இல் கல்வி கற்கும் மூன்று பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் இதன்போது உயிரிழந்தனர்.
குறித்த படகு நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது குறித்த படகில் மூன்று மாணவர்கள் இருந்துள்ளனர்.
அவர்களை காப்பாற்ற குளத்தின் கரையில் இருந்த ஆசிரியர் ஒருவர் குளத்தில் குதித்துள்ள நிலையில் நான்கு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் மூவர் நான்கு மாணவர்கள் மற்றும் ஏழு மாணவிகளுடன் குறித்த பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் மூன்று மாணவர்கள் பாழடைந்த படகொன்றில் சென்ற போது இந்த துரதிர்ஷ்டவசமான அந்த படகு விபத்துக்குள்ளாகி இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த 16 வயதுடைய 3 மாணவர்களும் 27 வயதுடைய ஆசிரியரும் வெல்லாவலி களுதன்வெளி பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
மரண விசாரணையின் பின்னர் சடலங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சமபவமானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த அனைவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.