யாழ்ப்பாணத்தில் தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் எதிர்ப்பு போராட்டம் இன்று (11) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, யாழ். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள பிரதான கொடிக் கம்பத்தில் கறுப்புக் கொடியினை மாணவர்கள் ஏற்றினர்.
இதன்போது பொருளாதார பின்னடைவு நேரத்திலும் பெருந்தொகையான பணச் செலவில் இரண்டாவது தடவையாக சுதந்திர தினத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏன் என கேள்வி எழுப்பிய மாணவர்கள், தேர்தலுக்கு பணம் இல்லை என கூறி, சுதந்திர தினத்துக்கு பணத்தை செலவழிப்பது எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை, குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் சத்தியசீலன் , கிந்துஜன் , ராஜசிறீகாந் ,பொன்மாஸ்ரர் , தவபாலன்சதீஸ் , ரஜீவ்காந் சுதாகரன் உட்பட இருபதிற்கும் மேற்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் மற்றும் தமிழின உணர்வாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தாயகத்திலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.