
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பயங்கர பூகம்பத்தின் நான்கு நாட்கள் கடந்த பின்னரும் கட்டட இடிபாடுகளில் இருந்து சிலர் உயிருடன் மீட்கப்பட்டது சோர்வுக்கு உள்ளாகி இருக்கும் மீட்பாளர்களுக்கு உற்சாகத்தை தந்தபோதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22000 ஐ கடந்துள்ளது.
பிராந்தியத்தில் பல தசாப்தங்களில் இடம்பெற்ற மோசமான இந்த பூகம்பத்தை அடுத்து கடுங்குளிர், பட்டினி மற்றும் வீடற்ற நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் வாடுகின்றனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (09) இரவிலும் பலரும் இடிபாடுகளில் இருந்து உயிருடன் காப்பற்றப்பட்டுள்ளனர். எனினும் பிராந்தியத்தில் இருக்கும் நகரங்கள், கிராமங்கள் எங்கும் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகி இருக்கும் நிலையில் இடிபாடுகளில் சிக்கியோரை உயிருடன் மீட்கும் நம்பிக்கை கடக்கும் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் குறைந்து வருகிறது.
எனினும் பூகம்பம் நிகழ்ந்து 101 மணி நேரத்தின் பின்னர் தெற்கு துருக்கியில் இடிந்த கட்டடம் ஒன்றுக்குள் இருந்து ஆறு பேர் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர். உறவினர்களான இந்த ஆறு பேரும் இடிந்த கட்டடத்தின் சிறிய பகுதி ஒன்றுக்குள் உயிர் தப்பி இருந்துள்ளனர்.
7.8 ரிக்டர் சக்திவாய்ந்த பூகம்பம் மற்றும் அதன் பின் ஏற்பட்ட அதிக வலுக்கொண்ட அதிர்வுகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 1999 பூகம்பத்தில் உயிரிழந்த 17,000 எண்ணிக்கையை விஞ்சியுள்ளது. அப்போது வடமேற்கு துருக்கியில் இதனை ஒத்த சக்திவாய்ந்த பூகம்பம் ஒன்று ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த பூகம்பம் தற்போது இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த ஏழாவது அதிக உயிரிழப்புக் கொண்ட இயற்கை அனர்த்தமாக பதிவாகியுள்ளது.
இது 2011இல் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி அனர்த்தத்தை விஞ்சி இருப்பதோடு 2003இல் அண்டை நாடான ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தில் பதிவான 31,000 பலி எண்ணிக்கையை நெருங்கியுள்ளது.
90 மணி நேரத்தின் பின் பச்சிளம் குழந்தை மீட்பு
தெற்கு துருக்கில் பூகம்பம் நிகழ்ந்து 90 மணி நேரத்தின் பின்னர் 10 நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்றும் அதன் தாயும் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஹடாயா மாகாணத்தில் உள்ள கட்டட இடிபாடுகளில் இருந்தே யாகிஸ் என்ற அந்தப் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது. இடிபாட்டில் இருந்து எடுக்கப்பட்ட அந்தக் குழந்தையை வெப்பப் போர்வையில் போர்த்தப்பட்டு அம்புலன்ஸ் வண்டியில் அனுப்பப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. குழந்தையின் தாய் தூக்குப் படுக்கையில் அழைத்துச் செல்லப்பட்டார்.