மதுரை – திருப்பரங்குன்றம் மலைக் குகையில் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தமிழி கல் வெட்டு கண்டுபிடிக்கப்பட்டமை தொல்லியல் ஆர்வலர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. திருப்பரங்குன்றம் தொடருந்து நிலையம் எதிரிலுள்ள குன்றின் மேற்குசரிவில் உள்ள 2 குகைகளில் கற்படுக்கைகளும், கி. மு. 1 மற்றும் கி.பி.1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 3 தமிழி கல்வெட்டுகளும் மத்திய தொல்லியல் துறையால் பாது காக்கப்படுகின்றன. இதனிடையே மேலேயுள்ள குகைக்குச் செல்லும் வழியில், அதன் இடதுபுறம் ஒரு சிறிய குகை உள்ளது. இதனுள்ளே 5 கற்படுக் கைகள் உள்ளன. இதில் விதானத்தின் மேற்குப் பகுதியில் ஒரு தமிழி கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் வெ. பாலமுரளி கண்டறிந்தார். பின்னர் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே. ராஜகுரு, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் அந்த கல்வெட்டை படியெடுத்து, தொல்லியலாளர் சாந்தலிங்கம் துணையுடன் படித்ததில், அது சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி கல்வெட்டு எனத் தெரியவந்தது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் வே.ராஜகுரு, வெ.பாலமுரளி ஆகியோர் கூறியதாவது: இக்குகையிலுள்ள கல்வெட்டில் 2 வரிகள் உள்ளன. முதல் வரியில் ‘த, ர’ தவிர மற்ற எழுத்துகள் சிதைந்துள்ளன. 2ஆம் வரியிலும் சில எழுத்துகள் அழிந்துள்ளன. சில எழுத்துகள் இடைவெளி விட்டு எழுதப்பட்டுள்ளன. முதல் வரியின் தொடர்ச்சியாக அமைந்த இரண்டாம் வரியில் உள்ள எழுத்துகளை ‘யாரஅதிறஈத்த வதர’ என படிக்கலாம். குகையிலுள்ள 5 கற்படுக்கைகளை குறிக்க 5 கோடுகள் வெட்டப்பட்டுள்ளன. இக்கற்படுக்கைகளை அமைத்து கொடுத்தவர் பெயராக ‘யாரஅதிற’ எனக் கொள்ளலாம். அதிட்டானம் என்றால் இருக்கை என்ற பொருளும் உண்டு. எனவே இக்கல்வெட்டு கி. மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்.
இக்கல்வெட்டை மத்திய, மாநில தொல்லியல் துறை ஆய்வு செய்து முழு தகவலையும் வெளிக் கொண்டு வந்தால் மதுரை அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதுகுடிகள் பற்றிய புதிய தகவல்கள் கிடைக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர .