இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்டு இராமநாதபுரம் மாவட்டம் மண்டபமருகே கடலில் வீசப்பட்ட 12 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்தும் நீச்சல் வீரர்கள் நடுக்கடலில் தங்கக் கட்டிகளை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே புதன்கிழமை கடலில் மர்ம மூட்டையை வீசிய 03 பேரைக் கைது செய்து, மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
மூட்டையில் தங்கக் கட்டிகள் இருக்கலாமெனச் சந்தேகித்து, அதைத் தேடும் பணியும் நடைபெற்றது.
இலங்கையிலிருந்து மண்டபம் வழியாக இராமநாதபுரம் மாவட்டத்துக்கு தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, கடலோரக் காவல் படையினரும், மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் மண்டபம் அருகே கடலில் புதன்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
.
அப்போது, இலங்கையிலிருந்து மண்டபம் நோக்கி நாட்டுப் படகு ஒன்று வந்தது. அதிகாரிகள் வருவதைக் கண்டதும் படகிலிருந்தவா்கள் மூடை ஒன்றை கடலுக்குள் தூக்கி வீசினர். இதைக் கண்ட அதிகாரிகள் படகிலிருந்த 03 பேரையும் கைது செய்து விசாரித்தனா்.
விசாரணையில், அவா்கள் 03 பேரும் மண்டபம் பொங்காலி தெருவைச் சோ்ந்த 30, 25, 25 வயதுடையவர்கள் எனத் தெரிய வந்தது. கடலில் வீசப்பட்ட மூட்டையில் பல கோடி ரூபா மதிப்பிலான தங்கக் கட்டிகள் இருக்கலாமெனக் கருதி, 10க்கும் மேற்பட்ட நீச்சல் வீரா்களின் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்றது.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மூன்று பேரும், தங்களை படகில் அழைத்துச் சென்றால், தங்கத்தை வீசிய பகுதியை அடையாளம் காட்டுவதாகக் கூறியிருந்தனர். அவர்கள் வழங்கிய தகவலின்பேரில் இதுவரை கடலில் வீசப்பட்ட 12 கிலோ தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.