துருக்கியில் இன்று ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பத்தினால் துருக்கி மற்றும் சிரியாவில் 1,470 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியின் காஸியன்டெப் நகருக்கு அருகில் 17.9 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோளவியல் அளவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணியளவில் இப்பூகம்பம் ஏற்பட்டது. அவ்வேளையில் பெரும்பான மக்கள் உறக்கத்திலிருந்தனர்.
உயிர்தப்பிய பலர், அதிர்ச்சியுடன் வீடுகளிலிருந்து வெளியே ஓடி, பனிபடர்ந்த வீதிகளில் திரண்டிருந்தனர்.
சைப்பிரஸ் தீவு மற்றும் ஈராக்கிலும் இப்பூகம்பத்தின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
இப்பூகம்பத்தினால் குறைந்தபட்சம் 1,472 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில் இப்பூகம்பத்தினால் 912 பேர் உயிரிழந்துள்ளனர் என துருக்கிய ஜனாதிபதி தயீப் அர்துகான் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிரியாவில் இப்பூகம்பத்தினால் குறைந்தபட்சம் 560 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியாவில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 326 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1,089 பேர் காயமடைந்துள்ளனர்என சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் 221 பேர் உயிரிழந்துள்ளதுடன், 419 பேர் காயமடைந்துள்ளனர் என அப்பகதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடும் வைட் ஹெல்மெட் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
துருக்கியின் மல்தாயா மாகாணத்தில் 13 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற பள்ளிவாசலொன்று பகுதியளவில் உடைந்துள்ளது. அங்கு 28 குடியிருப்புகளைக் கொண்ட 14 மாடி கட்டடமொன்றும் இடிந்து வீழ்ந்தது.
தியார்பாகிர் நகரில் இடிபாடுகளுக்குள்ளிருந்து குரல்கள் கேட்பதாகவும் சுமார் 200 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒருவர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா ஆகியன துருக்கிக்கு அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதுடன், உதவிகளை அனுப்புவதாக அறிவித்துள்ளன. துருக்கியின் பரம வைரியான கிறீஸும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனின் ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலேன்ஸ்கியும், துருக்கிக்கு அவசியமான உதவிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.