வடக்கிற்கு சிவில் ஆளுநர் ஒருவரையே நியமிக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்ததே தவிர சிங்கள ஆளுநர் நியமிக்க வேண்டும் என்று ஒருபோதும் கூறவில்லை.ஆகவே அரசு பொய்களைத் திருப்பித் திருப்பிக் கூறியும்,ஏமாற்றியும் ஜனாதிபதித் தேர்தலில் குழம்பியகுட்டையில் மீன்பிடிக்க நினைக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இன்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு வருகை தந்து கூட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து கூட்டமைப்பு வெளிநடப்பு செய்தது.தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம், அரசின் காட்டாட்சி,பேயாட்சிக்கு நாங்கள் முடிவுகட்ட வேண்டும் என்பதைத் தான் இன்றைய சம்பவம் சுட்டிக்காட்டியுள்ளது.
எந்த அடக்கு முறைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடிபணியாது. மக்கள் பணி தொடரும் மக்களுக்கு தெளிவாக கூறியுள்ளோம் வடக்கு மாகாண சபைக்கு 2500 கோடி மட்டுமே அனுப்பப்பட்டது. அதிலும் 1600 கோடி ரூபா சம்பளங்களுக்கு உரியது.அபிவிருத்திக்காக 580 கோடியாகும். அதுவும் மாகாண திறைசேரிக்கு வந்தது 180 கோடி மட்டுமே. இதிலே 99 வீதம் ஏன் 100 வீதத்தை செலவிடுவோம் பணம் திரும்பிச் செல்லும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகவே முறையொன்று இருக்க வேண்டும். மக்களுடைய தேவைக்கேற்பவே நாம் செயற்படுவோம். அதை விடுத்து அவர்கள் எம்முடன் மோதலுக்கு வந்தால் நாங்கள் பயந்தோடும் ஆட்கள் இல்லை.என ஆக்ரோஷமாக தெரிவித்தார்.