01.02.2023
அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! இலங்கை தேசமானது தனது 75 ஆவது சுதந்திரதினத்தை 200 முதல் 500 மில்லியன் ரூபாவைச் செலவழித்து பெப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடவுள்ளது.
கடந்த 75 ஆண்டுகளாக இலங்கை தேசத்துக்குப் பிரித்தானியர்களால் சுதந்திரம் வழங்கிய போதும் அந்த மண்ணின் மூத்த பூர்வீகக்குடிகளான தமிழ் மக்களின் உரிமை, சுதந்திரம், வாழ்விடம், சுபீட்சமான வாழ்வு எதையுமே பௌத்த சிங்கள பேரினவாதம் பொருட்டாக மதித்தது கிடையாது. மாறாக உரிமையும், சுதந்திரத்தையும் கேட்டு அறவழியில் போராடிய தமிழ்மக்கள் கைகளில் ஆயுதம் ஏந்திப்போராடவே வைத்தது. தமிழ்மக்கள் தமது நியாயத்திற்காக நின்ற போது அதனை கொடுக்காது அடிமை வாழ்வை ஏற்படுத்தியது, அப்பாவியான மூன்று லட்சத்திற்கு மேலான தமிழின மக்களின் உயிர்களை பலியெடுத்தது, பலகோடி சொத்துக்கள் சூறையாடப்பட்டது. பல லட்சம் மக்கள் நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். பல்லாயிரம் மக்கள் அங்கவீனர்களாக்கப்பட்டனர், பெண்கள் வாழ்க்கைத்துணையை இழந்தனர். பிள்ளைகள் பெற்றவர்கள் இல்லாது ஆக்கப்பட்டனர். பெற்றோர்கள் தமது குடும்ப உறவுகளை பறிகொடுத்தனர், பிள்ளைகள் கண்முன்னே கைது செய்யப்பட்டும், கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டனர். இவ்வாறு அந்தநாட்டின் மூவின மக்களின் செங்குருதியிலும், கண்ணீரிலும், வேதனை மூச்சிலுமே தனது 75 ஆவது சுதந்திரதினத்தைப் பெரும் எடுப்பில் கொண்டாடவுள்ளது.
தனது சிங்கள இனத்துக்கும், மாற்றான் தாய் மனப்பாங்குடன் நடாத்திவரும் தமிழ், இசுலாமிய மக்களையும் பெரும் பொருளாதாரத் துன்பத்திற்குள் உள்ளாக்கிவிட்டு அப்பாவி தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்காகவும், ஆயுதத்திற்காகவும், இராணுவச் செலவீனங்களுக்காகவும் சிங்கள தேசம் கடந்த 50 ஆண்டுகளாக செலவழித்ததின் துயரநிலையே இன்று ஒட்டு மொத்த இனத்தைப் பாதித்திருக்கின்றது. இதனை மூடிமறைக்கச் சர்வதேசத்துக்கு இலங்கைத்தீவில் இனப்பிரச்சனை இல்லை அது உள்நாட்டுப்பிரச்சனையே என்பதைக் காட்டும் வகையிலும் நாட்டை மீள் புனருத்தாபனம் செய்தால் பிரச்சனை தீர்ந்துவிடும், என்ற போக்கில் தற்பொழுது பயணிக்க முனைவதும், அதன் ஒரு வெளிப்பாடே எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் நாள் நடைபெறவுள்ள 75 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டமாக கருதப்படுகின்றது. அதற்காக உலகமெங்கும் இருந்து 400 க்கும் மேற்பட்ட ராஐதந்திரிகள் அழைக்கப்பட்டிருப்பதும், பல நாட்டு அரசதலைவர்கள், தனியார் நிறுவனங்களின் பிரதானிகள் என 3,250 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதும், இதற்காக 200 முதல் 500 மில்லியன் ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளமையும் எடுத்துக்காட்டுகின்றது.
நாட்டின் பொறுப்பையேற்றிருக்கும் சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா சிங்கள தேசத்திற்கு ஒன்றும் புதியவரல்ல சர்வதேசத்தின் துணையுடன் தமிழர்களுக்குத் தீர்வுகள் எட்;டப்படுகின்ற வேளைகளில் பதவிகளில் இருந்தும் அதனை தவிர்த்தவர். இலங்கைத்தீவின் 75 வருடகால நன்மை, தீமைகளில் இவருக்கும் பெரும் பணி உண்டு. அதனால்தான் அண்மையில் 75 ஆவது சுதந்திரதினத்திற்கு முன்பாக தமிழர் இனப்பிரச்சனைக்குத் தீர்வு எட்டப்படும், காணாமல்போன உறவுகளுக்கு நீதி கிடைக்கும், நீண்டகாலமாகச் சிறையில் இருப்பவர்கள் விடுதலைசெய்யப்படுவர்கள், அபகரிக்கப்பட்ட தமிழர் நிலங்கள் விடுவிக்கப்படும் என்று பல்வேறு ஆசைவார்த்தைகளைக் கடந்த 75 வருடமாக சொல்வதுபோலவே சொல்லிக்கொண்டிருக்கின்றார். எதுவுமே நடந்ததாக இல்லை மாறாக இலங்கையென்னும் ஒட்டுமொத்த தேசத்தின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள சீனாவின், இந்தியா, சர்வதேசநாடுகளின் கைகளை ஏந்திநிற்க வைத்துள்ளது.
புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கும், இனப்படுகொலைக்கும் நீதியும் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதை சர்வதேசம் உணர்த்துகின்றது. அதன் ஒரு வெளிப்பாடு கனடா அரசு, பிரித்தானிய ஆளும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானங்களாகும். இது அடுத்தடுத்து ஐரோப்பிய நாடுகளிலும் கொண்டுவரக்கூடிய செயற்பாட்டைச் செய்வதும்,கடமையும் அந்தந்த நாடுகளில் உள்ள தமிழர் கட்டமைப்புகளுக்கே உண்டு.
இந்த நிலையில் தமிழர் தாய்நிலமான வடக்கு, கிழக்கு வாழ் தமிழ்மக்கள், இராணுவ, புலன்நாய்வுத்துறையின் கெடுபிடிகள், கைதுகள், மிரட்டல்களுக்கு மத்தியில் தமது சனநாயகப் போராட்டத்தைச் செய்தே வருகின்றனர். எதிர் வரும் பெப்ரவரி 4 ஆம் நாள் சிங்கள தேசத்தின் சுதந்திரதினக்கொண்டாட்டத்தைத் தமிழர்களின் வலிநிறைந்த கரிநாளாக நினைவுகூரவுள்ளனர். இதன் வெளிப்பாடையாக பெரும்போராட்ட ஏற்பாட்டை பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
இதே வேளை தமிழ்மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் சிங்கள தேசத்தின் 75 ஆவது சுதந்திரநாளை எதிர்த்து தமிழர்கள் கரிநாளாக, தாம் வாழும் நாட்டின் அரசுக்கும், மக்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளதோடு அதனை தமிழ்மக்கள் ஒன்றுசேரும் ஒன்றுகூடலாகவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
பிரான்சில் எதிர்வரும் 4 ஆம் நாள் றீப்பப்ளிக் Pடயஉந னந டய சுநிரடிடஙைரந ( சுதந்திர விடுதலை தேவியின் சிலைக்கு) முன்பாக பி. பகல் 15:00 மணிக்கு நடைபெறவிருக்கும் ஒன்றுகூடலில் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்து கொண்டு சிங்கள தேசம் தமிழர்களின் செங்குருதி மீதும், உயிர்மீதும் நின்றே தனது சுதந்திரநாளை கொண்டாடுகின்றது என்பதை தமிழர்களாக ஒன்றாகி பிரெஞ்சுதேசத்திற்கு கூறுவோம் வாருங்கள். எமது தேசத்தை நாமே போராடி பெறுவோம்.
“ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்’’
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு