
இஸ்ரேல், பாலத்தீனப் பிராந்தியங்களில் கடந்த சில நாள்களில் தாக்குதல்களும், பதில் தாக்குதல்களுமாக பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இரு நாள்களுக்கு முன்பு பாலத்தீன நகரில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இப்போது கிழக்கு ஜெருசலேமில் யூத ஜெபக்கூடத்தில் தாக்குதல் அரங்கேறி இருக்கிறது. இதில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். யூதக் குடியேற்றப் பகுதியில் இருக்கும் ஜெபக்கூடத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த பலர் வழிபாட்டுக்காகக் கூடியிருந்த போது, துப்பாக்கியுடன் வந்த ஒருவர் அவர்களை நோக்கிச் சரமாரியாகச் சுட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். “சமீபத்திய ஆண்டுகளில் சந்தித்த மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்று” என்று தாக்குதல் நடந்த இடத்தில் பேசிய இஸ்ரேலிய காவல்துறை கண்காணிப்பாளர் கோபி ஷப்தாய் கூறினார். துப்பாக்கியுடன் வந்து தாக்குதல் நடத்திய நபர் கிழக்கு ஜெருசலேம் பகுதியைச் சேர்ந்த பாலத்தீனர் என்று உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் தாக்குதலை அடுத்து மேற்குக்கரை மற்றும் காஸா பகுதியில் உள்ள பாலத்தீனர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
(நன்றி:பிபிசி தமிழ்)