படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில், கறுப்பு ஜனவரி நினைவேந்தல் நிகழ்வு, கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் நேற்று மாலை இடம்பெற்றது.
இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கறுப்பு ஜனவரி என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிகழ்வில் காணமாலாகப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொடவின் மனைவி சந்தியா எக்னெலியகொ, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.
உயிர்நீத்த ஊடகவியலாளர்களை நினைவுகூறும் வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தம் வகையில் காணாமலாக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டதை முன்னெடுத்தனர்.
இதன்போது கருத்துரைத்த சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பின் ஒருங்கமைப்பாளர் அலககோன்,
கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட மற்றும் தாக்கப்படும் ஊடகவியலாளர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நாம் போராடி வருகின்றோம்.
அதேபோன்று ஊடக சுதந்திரத்துக்காக பல ஆண்டுகளாக நாம் போராடி வருகின்றோம்.
நாங்கள் வீதிக்கு இறங்கி போராடினாலும் இதுவரை நீதி நலைநாட்டப்படவில்லை. நாட்டில் நீதி உரிய முறையில் அமுல்படுத்தப்படுவதில்லை.
ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தவதாகவும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாகவும் ஒவ்வொரு அரசாங்கங்களும் கூறி வருகின்றன.
எனினும் அவை தேர்தல் கால வாக்குறுதிகளாகவே உள்ளன.
கடந்த காலங்களில் எத்தனை ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள் தாக்கப்பட்டார்கள், நாட்டை தப்பி செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள் என்பது சகலருக்கும் தெரிந்த விடயமாகும்.
ஊடக ஒடுக்குமுறையை தடுப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படாத வரை நாட்டில் ஊடக சுந்திரம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு கொண்டே இருக்கும்.