நுவரெலியாவில் கோர விபத்து – 07 பேர் பலி: 50 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

0
130

நுவரெலியா – நானுஓயா – ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் 03 சிறுவர்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், 53 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ் ஒன்று, வான் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


குறித்த விபத்தில் வானில் பயணித்த அறுவரும், முச்சக்கரவண்டி சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வானில் பயணித்த தாய், தந்தை, இரு பிள்ளைகள், உறவினர் ஒருவர் மற்றும் சாரதி ஆகியோர் ஹட்டன், டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், முச்சக்கரவண்டி சாரதி நானுஓயா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் விபரம்,
01:- அப்துல் ரஹீம் (55)
02:- ஆயிஷா பாத்திமா (45)
03:- மரியம் (13)
04:- நபீஹா (08)
05:- ரஹீம் (14)
06:- நேசராஜ் பிள்ளை (25) (வான் சாரதி)
07:- சன்முகராஜ் (25) (ஆட்டோ சாரதி)
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலாவந்த மாணவர்களை ஏற்றிவந்த பஸ், மீண்டும் கொழும்பு நோக்கி நேற்றிரவு பயணித்துக்கொண்டிருந்தது.
இந்நிலையில் அதிக வேகம் காரணமாகவும், ´பிரேக்´ செயற்படாததாலும் நானுஓயா – ரதெல்ல பகுதியில் வைத்து வான் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
அத்துடன் பஸ் சுமார் 50 அடிவரை பள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்டது.
வானும், முச்சக்கரவண்டியும் கடுமையாக சேதமானது.
விபத்தை அடுத்து பிரதேச மக்களும், பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளன.
பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலங்கள் கையளிக்கப்படும்.
காயமடைந்த மாணவர்களில் மேலதிக சிகிச்சை தேவைப்படுவோரை ஹொலிகொப்டர் மூலம் கொழும்புக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
வெளியிடங்களில் இருந்துவரும் சாரதிகள் நானுஓயா குறுக்கு வீதியை பயன்படுத்துவதால் விபத்துகள் அதிகரிக்கின்றன.
அவர்களுக்கு அவ்வீதியின் தன்மை புரிவதில்லை.
எனவே, சுற்றுப்பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
விபத்தை அடுத்து நேற்றிரவே வைத்தியசாலைக்கு சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
அத்துடன், குறுக்கு வீதியை மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here