வட-கிழக்கில் வாழும் சிறுபான்மை சமூகம் காலாகாலமாக எந்த அரசாங்கம் ஆட்சிக்கு மாறி மாறி வந்தாலும் ஒடுக்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும் என இம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். தொல்பொருள் என்ற போர்வையில் தனியாருக்குச் சொந்தமான காணிகள் அரச திணைக்களத்தினர் மூலமாக அபகரிக்கப்படுவதும் மக்கள் வீதிப் போராட்டங்களும் தொடர்கின்றன.சிறுபான்மை இன மக்கள் தங்களுக்கு தீர்வு கோரிய போராட்டமொன்றையும் இதற்கு எதிராக முன்னெடுத்துள்ளனர்.இது வட கிழக்கில் தற்போது வரை இடம் பெற்று வருகிறது.
இதுவே 100 நாட்கள் செயல்முனைவு என்ற போராட்டத்தின் ஒரு கட்டமாக
“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும்.எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை போன்ற முன்னெடுப்புக்களை கொண்ட மனித உரிமைகளுடன் கூடிய தீர்வினை இம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இப் போராட்டமானது திருகோணமலை மாவட்டத்திலும் பல இடங்களிலும் இடம் பெற்றது.வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு இதனை ஏற்பாடு செய்து காணி அபகரிப்பு போன்ற மக்கள் சொத்துக்களை பாதுகாக்க செயற்பட்டு வருகின்றனர்.தொல்பொருள் என்ற போர்வையில் நில அபகரிப்பு தொடர்பில் திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் வினவியபோது இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் கணிப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் .சிலர் அதன் மூலம் இன ரீதியிலான பிரச்சினைகளை உருவாக்க முயற்ச்சிக்கின்றனர்.கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் காணிப்பிரச்சினை என்பது மிகவும் மோசமான நிலைப்பாட்டில் உள்ளதாகவும் இன்று இந்த காணி விடயங்களால் இன ரீதியிலான குழப்பங்களை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேச செயலக பிரிவில் தோப்பூர் உல்லைக்குளம் கிராமத்தில் 576 ஏக்கர் காணியில் குறிப்பாக 96 தமிழ், 110 முஸ்லிம் விவசாயிகளும் விவசாயம் செய்வதாகவும் அதில் சிலருக்கு 1930 ம் ஆண்டு ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் காணி அனுமதி பத்திரமும், ஏனைய சிலருக்கு 1976-1980 ம் ஆண்டு காலப்பகுதியிலும் ஆட்சி உறுதி வழங்கப்பட்டிருப்பதாகவும், யுத்தம் உக்கிரமடைந்த காலங்களில் அந்த பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் முஸ்லிம்கள் விவசாய நடடிக்கையில் ஈடுபடாமல் இருந்ததாகவும், 2009 க்கு பிற்பாடு தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையாக விவசாய நடடிக்கையில் ஈடுபடும் பகுதியாக உல்லைக்குளம் காணப்பட்டது.
மக்கள் உண்பதற்கு கூட வழியில்லாமல் பொருளாதார சிக்கலில் இருக்கின்ற நிலையில் காணி பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக அரசாங்கத்தை எச்சரித்த அவர் கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் கணிப்பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இவ்வாறாக திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலகப் பகுதியிலும் சிறுபான்மை மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்த முயற்சிகள் கூட இடம் பெற்று வருகின்றது.
நிலங்கள் சம்மந்தமாக தொல்லியம் திணைக்களம் இது போல வெவ்வேறு சட்டங்களின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் மக்களுடைய காணிகளை அபகரிக்கும் செயற்பாடு வடக்கிலும் கிழக்கிலும் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றது என ஜனாதிபதி சட்டத்தரணியுமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் தென்னைமரவாடி , திரியாய் போன்ற பகுதிகளில் தமிழ் விவசாயிகளின் பூர்வீக காணிகளில் விவசாயத்தில் ஈடுபட தொல்பொருள் திணைக்களம் தடுப்பதற்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற வழக்கிலே ஆஜராகிய பின் அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்
தொல் பொருள் திணைக்களம் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயல் அரங்கேற்றி வருகின்றது. அதன் ஒரு பிரதிபலிப்புத் தான் திருகோணமலை மாவட்டம் திரியாய் மற்றும் தென்னமரவாடி கிராமத்தில் தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளில் அவர்கள் விவசாயம் செய்வதற்கு தடுத்த ஒரு சம்பவம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம் பெற்றது.
அந்தவேளையில் நிலத்திற்கு உரித்தான் விவசாயிகள் மேல் நீதி மன்றத்திலே வழக்கு தாக்கல் செய்து இடைக்கால தடை உத்தரவினைப் பெற்றிருந்தார்கள். அந்த வழக்கை ஆதரித்து வாதாடியவர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் இடைக்கால உத்தரவை மேல் நீதி மன்றம் வழங்கி தொல் பொருள் திணைக்களம் விவாயிகளுக்க இடையூறு கொடுக்க கூடாது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்ய உரித்துடையவர்கள் என கட்டளை பிறப்பித்திருந்தது.
அந்த வருடம் விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் செய்கையை மேற் கொண்டு அறுவடை செய்யக் கூடியதாக இருந்தது.ஆனால் அதற்கு பிறகு தொடர்ச்சியாக விவசாயிகள் தடுக்கப்பட்டனர்.வேறு பல அச்சுறுத்தல்களுக்கும் விவசாயம் செய்வதற்கான தடுப்புக்களும் மேற் கொள்ளப்பட்டு தங்களுடைய விவசாய நடவடிக்கைகளை இவ்வருடமும் மேற் கொள்ள முடியாதவர்களாக காணப்படுகின்றனர்.
இந்த பின்னனியிலே இறுதி விவாதத்திற்கு செப்டெம்பர் 30ம் திகதி மேல் நீதி மன்றத்திலே இந்த வழக்கு எடுக்கப்பட்டது. சட்டத்தரணி கேசவன் சயந்தனுடன் நானும் இந்த வழக்கிலே ஆஜராகி வாதாடி இருக்கின்றோம். மிக முக்கியமாக மாகாண மேல் நீதி மன்றுக்கு நிலம் சம்மந்தமான எழுத்தாணைகளை வழங்குகின்ற அதிகாரம் இல்லை என்ற வாதத்தை அரச தரப்பு முன் வைத்திருந்தது.
அரசியலமைப்பின்படி காணி அதிகாரம் மாகாணத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.மாகாண நீதி மன்றம் எழுத்தாணை வழங்குகின்ற போது எந்த ஒரு நபருக்கு எதிராகவும் மாகாண நிரலில் உள்ள விடயம் சம்மந்தமாக எழுத்தாணை வழங்க முடியும் என்று சொல்லபட்டிருக்கின்றது.அரசியல் அமைப்பில் உள்ள குறித்த விடயத்தை மன்றுக்கு நாம் சுற்றிக் காட்டியுள்ளோம்.
100 வருடங்களுக்கு முற்பட்ட காணி உறுதிகளை குறித்த காணி உரிமையாளர்கள் வசம் உள்ளது.அவற்றை நாம் வழக்கிலே காட்சிப் படுத்தி இருக்கின்றோம். ஆகையால் இது அரச காணி அல்ல தனியார் காணி இந்த காணியிலே தங்களுடைய விவசாயத்தை செய்வதற்கு அவர்களுக்கு உரித்துண்டு அதை தடுப்பதற்கு எவருக்கும் உரிதில்லை என்ற வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.
வழக்கினுடைய இறுதித் தீர்ப்பு எதிர்வரும் டிசெம்பர் 02ம் திகதி என திகதியிடப்பட்டுள்ளது.அதற்கு முன்னதாக நவம்பர் மாதத்திலே இரு தரப்பினரும் எங்களுடைய வாதங்களுக்கு சார்பான எழுத்து மூல சமர்ப்பணங்களை செய்யலாம் என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலங்கள் சம்மந்தமாக தொல்லியம் திணைக்களம் இது போல வெவ்வேறு சட்டங்களின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் மக்களுடைய காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடு வடக்கிலும் கிழக்கிலும் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றது. எனவே இந்த வழக்கின் தீர்ப்பு ஒரு முக்கியமான தீர்பாக அமையும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். என ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இவ்வாறாக திருகோணமலை மாவட்டத்திலும் குறிப்பாக தமிழ் முஸ்லிம் மக்களுடைய காணி அபகரிப்பு தீவிரமாக இடம் பெற்று வந்தாலும் அதனை மீள பெற முடியாத மக்கள் உரிமைகளை வென்றெடுக்க முடியாத வண்ணம் அப்பாவி மக்கள் தடுமாறுகின்றனர். நீதியான நியாயமான தீர்ப்புக்களை எதிர்பார்க்கின்றனர் தொல்லியல் திணைக்களம் இப்படியான செயற்பாடுகளை தனியார் காணியில் மட்டுமல்ல மதஸ்தலங்களிலும் கை வைத்துள்ளது .அண்மையில் திருகோணமலை திருக்கோனேஸ்வர ஆலய கடைத் தொகுதி விவகாரமும் தொல்பொருள் என்ற நிலையில் அகற்ற வேண்டி ஏற்பட்ட போதும் அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது இந்த விவகாரத்தை பார்வையிட தொல்பொருள் அமைச்சர் விதும் விக்ரமநாயக்க நேரில் சென்று 11.10.2022 அன்று ஆராய்ந்து கோயில் பரிபாலன சபையினருடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
ரணில் அரசாங்கம் தொடக்கம் முன்னால் கோத்தபாய அரசாங்கம் கூட சிறுபான்மை இனத்தை இலக்கு வைத்து தொல்பொருளை மையமாக வைத்து நில ஆக்கிரமிப்பை நடாத்த முயற்சித்து வருகின்றனர்.
இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் சிறுபான்மை தமிழ் மக்களான நாம் ஆட்சிக்கு வந்த சிங்களப் பெரும்பான்மை அரசுகளின் இனவாதக் கொள்கைகளால் பல்வேறு வழிகளிலும் அடக்கப்பட்டு வந்துள்ளோம் .அது இற்றை வரை தொடர்கின்றது.நீதியான போராட்டங்களை கூட நடாத்த முடியாது நடாத்தினால் கைது செய்யப்படுகிறோம் அண்மையில் கொழும்பு காலி முகத்தேடலில் இவ்வாறான அனாவசியமாக நீதிக்காக போராடியவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.
இப்படியாக அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு சுதந்திரமற்ற நிலையில் உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்கின்ற சமூகமாக சிறுபான்மை இன மக்கள் மாற்றப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் தொல்பொருள் மாத்திரமல்ல இது போன்று அரச படையினர் கூட பல மக்கள் காணிகளில் பலாத்காரமாக குடியிந்து வருகின்றனர்.
அவ்வகையில் வடக்கு கிழக்கு மக்களுக்கான நில அபகரிப்புக்களுக்கு எதிரான தீர்வு என்பது இலங்கையின் அரசியலமைப்பின் அங்கமாயிருப்பதுடன் சர்வதேச சமூகத்தினாலும் ஐக்கிய நாடுகள் சபையினாலும் வரவேற்கப்படுகின்ற ஒன்றாகும்.