உக்ரைன் உலங்கு வானூர்தி விபத்தில் உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழப்பு!

0
103

உக்ரைனின் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றுக்கு அருகில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் உக்ரேனிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் உள்ளிட்ட 18 பேர் மரணமடைந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரேனிய ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவரான கைரிலோ திமோஷென்கோவின் கூற்றுப்படி, கீவ்வில் இருந்து வடகிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ப்ரோவரி நகரில் உள்ள முன்பள்ளிக்கு அருகில் சிறுவர்களும் ஊழியர்களும் இருந்தபோது விமானம் வீழ்ந்துள்ளது.

உக்ரைன் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி (Denys Monastyrsky) மற்றும் அமைச்சக அதிகாரிகளுடன் ஹெலிகொப்டரில் பயணம் செய்தவர்கள், விபத்தில் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தேசிய பொலிஸ் தலைவர் இகோர் கிளைமென்கோ தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் மொனாஸ்டிர்ஸ்கியின் பிரதி அதிகாரியாக Yevhen Yenin மற்றும் அமைச்சின் இராஜாங்க செயலாளர் யூரி லுப்கோவிச் (Yuriy Lubkovych) ஆகியோரும் இவ்விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 3 சிறுவர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக கீவ் பிராந்திய நிர்வாகத்தின் தலைவர் ஒலெக்ஸி குலேபா  டெலிகிராம் செயலி மூலம் தெரிவித்துள்ளார் .

15 பேர் சிறுவர்கள் உள்ளிட்ட குறைந்தது 29 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, குலேபா தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணம் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.

நாசவேலை, உபகரணங்கள் செயலிழப்பு மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறுதல் ஆகியவை சாத்தியமான காரணங்களாக கருதப்படுவதாக உக்ரைனின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது .

சம்பவத்தை தொடர்ந்து அனைத்து மாணவர்களும் ஊழியர்களும் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதோடு, விபத்து நடந்த இடத்தில் பொலிசார் மற்றும் மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக குலேபா குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் ரஷ்யாவின் துருப்புக்கள் பின்வாங்கும் வரை விபத்து இடம்பெற்ற ப்ரோவரி (Brovary) நகரின் கட்டுப்பாட்டிற்காக போராடி வந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு உக்ரேனிய நகரமான டினிப்ரோவில் (Dnipro) உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ரஷ்ய ஏவுகணை ஒன்று மோதியதில் ஆறு சிறுவர்கள் உள்ளிட்ட குறைந்தது 45 பேர் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இவ்விபத்து நடந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here